×

சில்வார்பட்டி மக்கள் அவதி 10 நாளாக பாடாய்படுத்தும் ‘பவர்கட்’ இரவில் மின்சப்ளையே இல்லை


தேவதானப்பட்டி, மார்ச் 15: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வைகை அணை துணை மின் நிலையத்தில் இருந்து ஜெயமங்கலம் மற்றும் சில்வார்பட்டி, நாகம்பட்டி, கதிரப்பன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி ஆகிய இடங்களுக்கு மின்சப்ளை வழங்கப்பட்டு வந்தது. திடீரென கடந்த 10 நாட்களாக இந்த பகுதிக்கு பெரியகுளம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து இரவு பகலாக மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பெரும்பாலும் மின்சாரம் இருப்பதில்லை. இதேபோல் பகல் நேரங்களில் தொடர்ந்து அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். விவசாய வேலைகள், தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.  

இது குறித்து சில்வார்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறுகையில், எங்கள் பகுதிக்கு வைகை அணை துணை மின்நிலையத்தில் இருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வந்தது. இதனால் எந்த தொந்தரவும் இல்லை, மின் வெட்டும் இல்லை. ஆனால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் கடந்த 10 நாட்களாக பெரியகுளம் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் சப்ளை செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறினர். இரவு மற்றும் பகல்  நேரங்களில் அதிக மின் வெட்டு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பெரும்பாலும் மின் தடை ஏற்படுவதால் பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் தூக்கமில்லாமல் பாதிக்கப்படுகின்றனர். இதே போல் விளைநிலங்களில் உள்ள சாகுபடி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகையால் மின்வாரிய அதிகாரிகள் சில்வார்பட்டி, நாகம்பட்டி, கதிரப்பன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி ஆகிய இடங்களுக்கு மீண்டும் வைகை அணை துணை மின்நிலைய மின்சாரம் தடையில்லாமல் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags : Silverpatti ,
× RELATED ஆருத்ரா தரிசன விழா சில்வார்பட்டியில் சப்பர ஊர்வலம்