×

பருவநிலை மாற்றத்தால் தூக்கத்தை தொலைக்கும் சென்னை, பெங்களுரு வாசிகள்: ஆய்வில் தகவல்

சென்னை: பருவநிலை மாற்றத்தால் சென்னை, பெங்களுரு வாசிகள் தூக்கத்தை தொலைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் நேரடிப் பாதிப்பால் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தென் இந்திய நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் நிம்மதியான உறக்கத்தை ஆண்டுதோறும் பல மணி நேரம் இழந்து வருவதாகத் திடுக்கிடும் ஆய்வு முடிவு ஒன்று எச்சரித்துள்ளது. கிளைமேட் சென்ட்ரல் என்ற அமைப்பு உலகளவில் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதாலும், காடுகள் அழிக்கப்படுவதாலும் உலக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆய்வு, வெப்பநிலை உயர்வினால் மனிதர்களுக்கு ஏற்படும் தூக்க இழப்பை முதன்முறையாக நேரடியாகக் கணக்கிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகளவில் ஒரு நபர் சராசரியாக 56 மணி நேரத் தூக்கத்தை அதிக வெப்பத்தின் காரணமாக இழந்துள்ளார். இதில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தூக்க இழப்பிற்குப் பருவநிலை மாற்றமே நேரடி காரணமாகும்.

இந்திய அளவில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தூக்க இழப்பில் தென் மாநிலங்கள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்திய பெருநகரங்களிலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது சென்னைதான். இங்குள்ள மக்கள் ஆண்டுக்குச் சராசரியாக 93 மணி நேர உறக்கத்தை வெப்பத்தின் காரணமாக இழக்கின்றனர். இதில் 5 மணி நேர இழப்பு நேரடியாகப் பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது. பொதுவாக குளுமையான வானிலை கொண்ட பெங்களூருவிலும் கூட இதன் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது.

அங்கு மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 8 மணி நேர கூடுதல் உறக்கத்தை பருவநிலை மாற்றத்தால் மட்டுமே இழக்கின்றனர். புதுச்சேரியில் வசிப்பவர்கள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 92 மணி நேர தூக்கத்தை இழக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக ஆந்திரபிரதேசம் (88.6 மணி நேரம்) மற்றும் கேரளா (88.3 மணி நேரம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இரவு நேரங்களில் வளிமண்டல வெப்பம் தணியாமல் போவதால் ஏற்படும் இந்த தூக்கக் குறைபாடு, மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கடுமையாகப் பாதிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனால் சிந்தனைத் திறன் குறைதல் மற்றும் மனச்சோர்வு, நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடைதல், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் அபாயங்கள் அதிகரித்தல் அன்றாட வேலைகளில் உற்பத்தித் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. நகரங்களில் கட்டிடங்கள் மற்றும் தார்ச் சாலைகளால் பகல் நேர வெப்பம் இரவிலும் தங்கிவிடும் ‘நகர்ப்புற வெப்பத் தீவு’ விளைவே இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் ஏசி போன்ற குளிரூட்டும் வசதிகள் இல்லாத ஏழை எளிய மக்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்காத நடுத்தர வர்க்கத்தினரே இந்த தூக்க இழப்பால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai, Bengaluru ,Chennai ,Bengaluru ,Indian ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து