×

கொளத்தூர் அஞ்சலகத்தில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பெரியார் நகரில் துணை அஞ்சல் அலுவலகத்தில், அஞ்சல் பாஸ்போர்ட் சேவை மையத்தை நேற்று ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகர மேயர் பிரியா, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, தமிழக தலைமை அஞ்சலக அதிகாரி மாரியம்மா தாமஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சென்னை மண்டலத்தில் 14வது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையமாக இந்த மையம் அமைந்துள்ளது. ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படும் என்ற இலக்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது.இந்த தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்படுவதால் வடசென்னை மக்களவை தொகுதியிலும் அதனை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் அதன் தொடர்புடைய சேவைகள் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: வடசென்னையில் இந்த பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அண்ணா சாலை சென்று தான் பாஸ்போர்ட் சேவைகள் பெற முடியும் என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது.அஞ்சலகத்தில் தபால், ஸ்டாம்ப் பெறும் காலம் மாறி இன்று, வங்கி, ஏ.டி.எம்., லோன், பாஸ்போர்ட் உள்ளிட்ட எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. முத்ரா லோன் உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்களும் அஞ்சலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : New Passport Service Center ,Kolathur Post Office ,Union Minister of State ,L. Murugan ,Chennai ,Union Minister of State for Information and Broadcasting and Parliamentary Affairs ,Postal Passport Service Center ,Sub-Post Office ,Periyar Nagar ,Kolathur Assembly ,North Chennai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து