×

மதநல்லிணக்க கந்தூரி விழாவில் இந்து, இஸ்லாமியர்கள் கூட்டு பிரார்த்தனை

சாயல்குடி, மார்ச் 15: கடலாடி அருகே சாத்தங்குடி வெள்ளாங்குளத்தில் பழமையான தர்ஹாவில் இந்து,இஸ்லாம் மக்கள் இணைந்து கந்தூரி விழா கொண்டாடினர். கடலாடி அருகே சாத்தங்குடி, வெள்ளாங்குளத்தில் சுமார் 350 ஆண்டு பழமையான ரதிமுத்தம்மாள் தர்ஹா உள்ளது. இங்கு இந்து,முஸ்லீம் மக்கள் இணைந்து ஆண்டு தோறும் மாசி மாதத்தில் வரும் வளர்பிறை முதல்நாளில் கந்தூரி திருவிழா கொண்டாடுவது வழக்கம். கடந்த 9ம் தேதி தர்ஹாவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கடைசி நாளான நேற்று முன்தினம் உலக நன்மைக்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் மவுலீது ஓதப்பட்டு, இந்து,முஸ்லீம் மக்களின் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தது.

பின்னர் தர்ஹாவில் உள்ள ரதிமுத்தம்மாள் மக்பராவில் புனித அக்தர் கலந்த சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. பிறைவடிவ பச்சை போர்வை போற்றப்பட்டு, மல்லிகை பூ சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, ஜவ்வாது, சந்தனம், அக்தர் தெளிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பிறகு கிடாய், சேவல் பலியிடப்பட்டது. பொதுவாக சமைக்கப்பட்டு, பனை ஓலை பட்டையில் கறிச்சோறு, பாரம்பரிய உணவு பொருட்கள் படையலிடப்பட்டு, பிறகு பொதுமக்களுக்கு பொதுஅன்னதானம் வழங்கப்பட்டது. கடலாடி பகுதியில் சமுதாய நல்லிணக்க விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் இத்திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து,முஸ்லீம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Reconciliation Ceremony ,
× RELATED சமய நல்லிணக்க விழாவில் சமூக சேவகர்களுக்கு விருதுகள்