புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையம் திடீர் ஆய்வு செய்தது. இதில், சில கல்லூரிகள் ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகள், நூலகங்கள், மாணவர்களுக்கு தேவையான தங்கும் விடுதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாமலேயே, வெறும் ஆவணங்களில் மட்டும் அனைத்தும் சரியாக இருப்பது போல் காட்டியது, தகுதிவாய்ந்த பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவமனை பணிகளுக்கான மருத்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பது, அதிகாரிகள் ஆய்வு செய்ய வரும் நாட்களில் மட்டும், தற்காலிகமாக பேராசிரியர்களை வெளியில் இருந்து வரவழைத்து, தங்களின் கல்லூரியில் தகுதியான ஆசிரியர்கள் இருப்பதாக காட்டிய முறைகேடுகள், மருத்துவ கல்லூரிகளுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் போதிய நோயாளிகள் இல்லாததால், ஆய்வின் போது மட்டும் வெளியில் இருந்து ஆட்களை கூட்டிவந்து படுக்கைகளில் அமர வைத்தது போன்ற அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
இதைத் தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணையம் புதிய அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் 100 சதவீதம் முழுமையாக இருந்தால் மட்டுமே புதிய கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும். ஏதேனும் குறைபாடுகளோ அல்லது போலி பேராசிரியர்கள், நோயாளிகள் போன்ற முறைகேடுகளோ கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி உடனடியாக மறுக்கப்படும். அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், அனைத்து மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ‘ஆதார் சார்ந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு செய்யும் அல்லது போதிய வருகைப்பதிவு இல்லாத கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும். கல்லூரியின் முக்கிய பகுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம், டெல்லியில் உள்ள தேசிய மருத்துவ ஆணையத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக கண்காணிக்கப்படும். உள்கட்டமைப்பு குறைபாடுகள் உள்ள கல்லூரிகள், புதிய இடங்களை உருவாக்குவதற்கோ அல்லது தங்களின் தற்போதைய இடங்களை தக்கவைத்து கொள்வதற்கோ தகுதி பெறாது.
எனவே, மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலை சரிபார்த்து, தங்களின் சேர்க்கையை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
