×

தொகுதி மறுவரையறை விவகாரம்; அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கோரி பிரதமருக்கு கடிதம்…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு தொகுதி மறுவரையறை தொடர்பாக அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் துவங்க உள்ள நிலையில், 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை (மாற்றப்பட்ட வடிவில்) மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்த சூழலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தொகுதி மறுவரையறை குறித்த அரசின் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்த கடிதம் மூலம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்து உள்ளார்.

நாட்டின் கூட்டாட்சி தத்துவம் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய இவ்விவகாரத்தில், அனைத்து அரசியல் கட்சிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என கடிதத்தில் கார்கே வலியுறுத்தியுள்ளார். மேலும் திருத்தப்பட்ட மசோதாவின் நகலை எதிர்க்கட்சிகள் முழுமையாக படித்து ஆராய போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

​​தொகுதி மறுவரையறை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் மார்ச் மாதம் முதலே தான் வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தனது கோரிக்கைகள் ஏற்று கொள்ளப்படவில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். அதே போல கடந்த ஏப்ரல் மாதம் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது, அதற்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்ததையும் பிரதமருக்கு கடிதத்தில் நினைவூட்டியுள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.

Tags : Delhi ,All India Congress ,President ,Mallikarjun Kharge ,Narendra Modi ,
× RELATED ஈரானின் சிறுவர் புற்றுநோய் மருத்துவமனை அருகே அமெரிக்கத் தாக்குதல்