×

வணக்கம் நலந்தானே!

உளச் சோர்வை அகற்றுங்கள்

இன்றைய காலகட்டத்தில் நம்மை நோக்கி நூற்றுக் கணக்கான விஷயங்கள் வருகின்றன. அவசியமானவற்றை கேட்டும், தேவையற்ற விஷயங்களை விலக்கியும் வைக்க வேண்டும். பெரும்பாலோருக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் போர் அடிக்கிறது…. போர் அடிக்கிறது… என்று செய்த வேலையை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே மனச் சோர்வுக்கு ஆளாவார்கள். அல்லது கையிலிருக்கும் செல்போனை வெறுமே இயக்கியபடியும் அமர்ந்திருப்பார்கள். இதையெல்லாம் விடுத்து மனதிற்கு செயலூக்கம் அளிக்கும் படைப்பூக்கம் அளிக்கும் செயல்களில் ஈடுபடுவது நல்லது.

அதற்கு முதலில் நீங்கள் வெகுநாட்களாக வாசிக்காது வைத்திருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்கலாம். நீங்கள் ஓவியர் எனில் நிறைய ஓவியங்களை வரைந்து தள்ளலாம். இதையெல்லாம் தாண்டி உங்கள் மனம் அதீத பலம் பெற இந்த தனிமையை உபயோகித்துக் கொள்ளுங்கள். அதற்கான ஒரே வழி மந்திர ஜபம் அல்லது தியானம். எதை நோக்கி தியானம் செய்வது என்கிற சந்தேகம் வந்தால் நீங்கள் அதிகம் பக்தி செலுத்தும் உங்களின் குருவோ அல்லது தெய்வத்தின் திருமுகத்தை நோக்கி தியானிக்கலாம். கூடவே, மந்திர ஜபமும் செய்யலாம். மெல்ல மனதிற்குள்ளாகவோ அல்லது சப்தமெழுப்பாதும் மந்திரத்தை ஜபிக்கலாம்.

முதலில் நூற்றியெட்டு, ஆயிரத்தெட்டு என்று இலக்கு வைத்துக்கொண்டு ஜபியுங்கள். எந்த மந்திரத்தை ஜபிப்பது என்பது உங்களின் தேர்வைப் பொறுத்தது. ஆனால், முதல் ஐந்து நிமிடங்கள் என்ன இது ஒன்றுமே ஆகவில்லை. மனம் இப்படி அலைபாய்ந்து கொண்டிருக்கின்றதே… தூக்கம் வருகின்றதே… என்று பேயாய் பறக்கும். இதெல்லாம் எதற்கு கண்ணை திறந்து விடுவோம் என்று உங்களை தியானத்திலிருந்தும் மந்திர ஜபத்திலிருந்தும் வெளியேற்றுவதிலேயே மனம் குறியாய் இருக்கும். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக உள்முகமாக செல்லத் தொடங்கும்போது உங்கள் மனதில் நிம்மதி பரவத் தொடங்கும். எண்ணங்களின் ஓய்ச்சல் அடங்கத் தொடங்கும். மனதிற்கு தியானத்தின் ருசி தெரியத் தொடங்கும்போது உங்களை அறியாது ஜபத்தை ஆனந்தமாக மேற்கொள்வீர்கள். தியானத்திலேயே கிடக்க மனம் விரும்பும்.

முதல் நாள் பதினைந்து நிமிடமே ஆனாலும், சட்டென்று உள்ளம் குளிர்ந்ததுபோலிருப்பதை உணர்வீர்கள். கடும் வெயில் நடுவே மழை பெய்தால் எப்படியிருக்குமோ அதுபோல இதற்கு முன் இருந்த மனதின் ஓயாத காட்டாறு ஓட்டம் இப்போது தெள்ளிய நீரோடைபோல மாறியிருப்பதை உணர்வீர்கள். தியானத்திற்கு அமரும் முன்பு முதல் ஐந்து நிமிடங்கள் மூச்சின் மீது கவனம் செலுத்தி விட்டு பிறகு ஜபத்திலோ அல்லது தியானத்திலோ ஆழலாம். ஏனெனில், மனம் அடங்கும்போது பிராணன் சீராகின்றது.

பிராணனின் போக்கு சீராகிறபோது மனம் அடங்குகின்றது. இவையிரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடைய விஷயங்களாகும். எனவே, எப்படியாவது தியானத்தின் மீது ருசி கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை கொண்டதை அனுபவத்தில் உணர்வீர்கள்.

கிருஷ்ணா
(பொறுப்பாசிரியர்)

Tags : Wellandana ,
× RELATED உள்ள(த்)தைச் சொல்கிறோம்