×

மரணத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பு; சபரிவர்மன் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்: மனைவிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய கனிமொழி குற்றச்சாட்டு

 

நாகர்கோவில் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சபரி வர்மன் வீட்டிற்கு ஆறுதல் கூற கனிமொழி எம்பி நேற்று மாலை வருகை தந்தார். மனைவி அமுதவல்லி, தாயார் மல்லிகா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது: சபரிவர்மன் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் குடும்பத்தார் போராடிய பிறகுதான் அரசு நடவடிக்கையே எடுக்க தொடங்கியுள்ளது. இதுவரை இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சரோ அல்லது அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற கூட முன்வரவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில், ‘அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று குடும்பத்தினர் கூறியதோடு ‘இந்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று சபரி வர்மனின் மனைவி மற்றும் சகோதரி கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எந்த நிவாரணமும் இதுவரைக்கும் அறிவிக்கப்படவில்லை. அவருடைய மனைவிக்கு அரசு வேலை தருவதாக அரசு வாய் திறந்து இதுவரை கூறவில்லை. சபரிவர்மன் குடும்பத்தினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருக்கிறது. சபரி வர்மன் உடலை வாங்கும்படி அவரது தந்தையிடம் வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள். எனவே நடந்த சம்பவத்துக்கு முதலில் அரசு பொறுப்பேற்க வேண்டும். அரசை தாண்டி ஒரு தவறு நடந்துள்ளது. இதற்கு முன்பு இதுபோல நடந்தபோது அரசு பொறுப்பேற்றது. ஆனால், இந்த அரசு யார் மேலாவது பழி போடுவதற்குத்தான் பார்க்கிறார்களே தவிர எதற்கும் பொறுப்பேற்க தயாராக இல்லை.

வழக்கைத் திசை திருப்புவதற்காகவும், சிலரை காப்பாற்றுவதற்காகவும் கைதிகள் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது என்று உறுதியாக நம்புகிறார்கள். எப்போது இறந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. அது என்ன மாதிரி அறிக்கை என்று தெரியவில்லை. காயங்களால் அவர் உயிர் இழக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் அவர் உயிர் இழப்பிற்கு காரணம் என்ன? அதை தெளிவாக கூற வேண்டும். சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஏன் தரவில்லை? பிரேத பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட காட்சிகளை ஏன் கொடுக்கவில்லை?பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை தான் தி.மு.க. வலியுறுத்துகிறது.

Tags : Tamil Nadu government ,Sabarivarman ,Kanimozhi ,Kanimozhi MP ,Nagercoil ,Amuthavalli ,Mallika ,Sabarivarman… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து