×

விஜய்யை விமர்சித்ததால் மாற்றுத்திறனாளி கைது; 50 நாட்களில் 4 லாக்கப் மரணங்கள்: தவெக அரசு மீது தமிழிசை குற்றச்சாட்டு

பாஜ முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கோயில் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது என்பது வேதனையான விஷயம். பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான பழநியாண்டவரின் சொத்துக்கள் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒவ்வொரு கோயிலுக்கும் எவ்வளவு நிலங்கள் இருக்கிறது? எந்த அளவிற்கு அரசாங்கம் அதை பாதுகாக்கிறது என்பதை முழுமையான அறிக்கையாக தயார் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும். அதேபோல் கல்குவாரியில் ரூ.60,000 கோடியில் ஆரம்பித்து ரூ.1 லட்சம் கோடி வரை மக்களுக்கான வரி பணம் சுரண்டப்பட்டது தெரியவந்துள்ளது.

மூடப்பட்ட குவாரிகள் காவிரி படுகையில் திறக்கப்படுகிறது என்பது சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடியது. முதல்வர் விஜய் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் பல எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்கிறார்கள். குதிரை பேரமா, வேறு பேரமா என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பேரம் நடக்கிறது. ராஜினாமா செய்தால் பேரம் கிடையாது. வாங்கினால்தான் பேரம் என்று நிர்மல்குமார் புதுவிதமான கருத்தை கூறுகிறார். அவ்வளவு தியாகிகளா ராஜினாமா செய்தவர்கள்? குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் லாக்கப் மரணம் அடைந்துள்ளார். விஜய்யை விமர்சித்தார் என்பதற்காக ஒரு மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதெல்லாம் கவனிக்கப்பட வேண்டும். மக்கள் தேர்வு செய்துள்ளார்கள். சட்டம், ஒழுங்கை சரியாக நிர்வகிக்க வேண்டும். 50 நாட்களில் நான்கு லாக்கப் மரணங்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை உடனே முதல்வர் கவனிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Vijay ,Tamilisai ,Thaweka government ,Former ,BJP ,president ,Tamilisai Soundararajan ,Srivilliputhur ,Tamil Nadu ,Palani ,Palaniyandavar ,Tamil Nadu government ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து