- Kariyapatti
- முத்துக்குமார்
- கல்குரிச்சி டாக்டர் தெரு
- காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம்
- வினயகஜோதி
- வர்ஷா
- யுவராஜா
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சி மருத்துவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி விநாயகஜோதி (45). இவர்களது மகள் வர்ஷா (21). முத்துக்குமாரின் அக்கா மகன் யுவராஜாவிற்கும் (32), வர்ஷாவிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், யுவராஜாவை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று வர்ஷா கூறி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த யுவராஜா, நேற்று காலை வர்ஷாவின் வீட்டிற்கு வந்தார்.
அங்கு வர்ஷா துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவரிடம், ‘திருமணத்திற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறாய்’ என கேட்டு யுவராஜா வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த யுவராஜா, திடீரென அரிவாளால் வர்ஷாவை வெட்ட முயன்றார். இதை பார்த்த வர்ஷாவின் தாய் விநாயகஜோதி தடுக்க முயன்றதால் அவர் மீது பலத்த வெட்டு விழுந்தது. மேலும், ஆத்திரம் தீராத யுவராஜா, வர்ஷாவையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த விநாயகஜோதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். வர்ஷா பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த மல்லாங்கிணறு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வர்ஷாவை மீட்டு சிகிச்சைக்காகவும், விநாயகஜோதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே கொலையாளி யுவராஜா அரிவாளுடன் மல்லாங்கிணறு போலீசில் சரணடைந்தார்.
