×

பல்லாவரத்தில் இருந்து திருவல்லிக்கேணி பள்ளிக்கு மாற்றுப்பணி; அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு பணியிட மாற்றம்: ஆசிரியர் கலந்தாய்வு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சரின் மனைவிக்கு சிறப்பு சலுகையா?

 

சென்னை: பணிமாறுதல் இல்லாத நேரத்தில், அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் ஆசிரியர் பணியிட பொது மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறும். ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு, கலந்தாய்வு வெளிப்படையாக நடப்பதாக கடந்த ஆட்சியில் எதிர்கட்சிகளே பாராட்டு தெரிவித்த நிகழ்வும் நடைபெற்றது. நடப்பு கல்வியாண்டுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு பள்ளிக்கல்வித்துறையின் எமிஸ் இணையதளம் வழியாக ஜூன் 15 முதல் 22ம் தேதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர்.

அதனை தொடர்ந்து, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதலுக்கான கலந்தாய்வும், மாவட்டத்துக்குள்ளேயே பணியிட மாறுதல் கலந்தாய்வும் நடந்தது. தொடர்ந்து ஜூலை 6ம் தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் நிர்மல்குமாரின் மனைவிக்கு கலந்தாய்வே நடைபெறாமல் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரின் மனைவி பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

அவருக்கு தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு பசுமை வழிச்சாலையில் உள்ள பங்களா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவிக்கு பணியிட மாற்றம் வழங்கியிருப்பது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணியிட மாறுதல் கவுன்சலிங் நடைபெறும் போது பல இடங்களை வெளிப்படையாக காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டை கடந்த பல ஆண்டுகளாக தெரிவித்து வருவதாக கூறும் ஆசிரியர்கள், இவ்வாறு மறைக்கப்படும் இடங்களில் இதுபோன்ற செல்வாக்கு உள்ளவர்களுக்கும், பணத்திற்காக விற்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சரின் மனைவிக்கு பணியிட மாற்றம் வழங்கப்படவில்லை. அயல்பணி எனப்படும் மாற்றுப்பணி அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். வழக்கமாக ஒரு பணியிடத்தில் ஆள் இல்லை என்றால் அந்த இடத்தை நிரப்பும் வகையில் மாற்றுப் பணி முறையில் பணி வழங்குவது வழக்கமான ஒன்றுதான். மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு காரணங்களின் அடிப்படையில், ஒருவரை அயல்பணியாக 3 முதல் 5 ஆண்டுகள் வரை பணியிட மாற்றம் செய்ய முடியும். ஆனால் வழக்கமாக மருத்துவ சான்றிதழுடன், உண்மையான மருத்துவத்தேவையுடன் வருபவர்களுக்கு கூட எளிதில் அயல்பணி கிடைப்பதில்லை என்பது நிதர்சனமாக உள்ளது.

ஆனால் அமைச்சர் என்ற காரணத்துக்காக அவரது மனைவிக்கு அயல்பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் பணி மாறுதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வழங்கப்பட்ட பணியிடத்தை காலியிடமாக காட்டாமல் மறைத்து வைத்து அயல்பணி வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

Tags : Pallavaram ,Thiruvallikeni School ,Minister ,Nirmal Kumar ,Chennai ,Tamil Nadu ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து