×

ஊட்டியில் பனியின் தாக்கம் குறைந்தது மலர் செடிகளை காக்க அரணாக வைத்த கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றம்

ஊட்டி, மார்ச் 14:  ஊட்டியில்  பனியின் தாக்கம் குறைந்த நிலையில் தாவரவியல் பூங்கா தொட்டிகளில் மலர்  செடிகளை மறைத்து வைக்கப்பட்டிருந்த மிலார் செடிகள் அகற்றும் பணிகள்  துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை காலமான  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  இவர்களை மகிழ்விக்க தோட்டக்கலைத்துறை மூலம் ஆண்டு தோறும் மே மாதம் மலர்  கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சி ஆகியவை  நடத்தப்படுகிறது. இதற்காக, 6 மாதங்களுக்கு முன்னதாகவே பூங்காக்களை தயார்  செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.  6 மாதங்களுக்கு முன்னதாக  நாற்று நடவு பணிகள் துவக்கப்பட்டு மலர் கண்காட்சியின் போது மலர்கள்  பூக்கும் வகையில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். அதேசமயம், டிசம்பர் மாதம்  முதல் பிப்ரவரி மாதம் வரை ஊட்டியில் உறைப் பனியின் தாக்கம் மிக அதிகமாக  காணப்படும்.

இச்சமயங்களில் மலர் செடிகள் பனியில் பாதிக்காமல் இருக்க,  பூங்கா முழுவதிலும் உள்ள பல லட்சம் மலர் செடிகள் மற்றும் 35 ஆயிரம்  தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளுக்கு கோத்தகிரி மிலார் செடிகள்  கொண்டு பாதுகாப்பது வழக்கம். இம்முறையும் கடந்த இரு மாதங்களுக்கு முன்  அனைத்து மலர் செடிகளுக்கும் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாப்பு  அரண் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஊட்டியில் பனியின் தாக்கம்  குறைந்துள்ளது. கோடை காலத்தால் இனி பனிப்பொழிவு  இருக்காது. இதனால், பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகள் மற்றும்  தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மிலார் செடிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள்  ஈடுபட்டுள்ளனர்.


Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு