×

அமைச்சர் நிர்மல்குமார் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்: அகில இந்திய யாதவ மகாசபை அறிவிப்பு

 

நெல்லை: விடுதலைப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குறித்த பதிவு தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என யாதவ மகாசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு யாதவ மகாசபை இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் எல்.டி.தாஸ் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் முதல் விடுதலைப் போராட்ட வீரராக திகழ்ந்த மாவீரர் அழகுமுத்துக்கோன். அவரது குருபூஜையொட்டி செயற்கை நுண்ணறிவு மூலம் தயார் செய்த ஒரு பதிவை அமைச்சர் நிர்மல்குமார் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதில் தவறான கருத்து இருந்ததை சுட்டிக்காட்டிய நிலையில் வார்த்தைகளை மட்டும் நீக்கி உள்ளார்.

அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறுகளை தெரிந்து பதிவிட வேண்டியது அவசியமாகும். அப்படி ஏதேனும் தவறு நிகழ்ந்தால் பகிரங்க மன்னிப்பு கோருவது அவசியம். ஆகவே, தனது பதிவு தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த யாதவ அமைப்புகளை ஒன்றிணைத்து பாளையங்கோட்டையில் வரும் 17ம் தேதி வெள்ளிக்கிழமை மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று மரியாதை செலுத்தவில்லை.

இதேநிலை தொடர்ந்தால் வருகிற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக யாதவ சமூக மக்களை அணி திரள செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது நெல்லை யாதவர் அறக்கட்டளை வக்கீல் செந்தில் குமரன், யாதவர் பேரவை சண்முகவேல், மாநகர திமுக வர்த்தக அணி கார்த்திக் தம்பான், பாஜ நிர்வாகி முத்துப்பட்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Minister ,Nirmal Kumar ,India Yadava ,Mahasabha ,Nellai ,Yadava ,Azhagumuthukon ,Tamil Nadu Yadava Mahasabha Youth League ,State General Secretary ,L.D. Das ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து