சென்னை: பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்க முதல்வர் விஜய் தலைமையில் வருகிற 16ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், இம்மாத இறுதியில் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் வகையிலான திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 22ம் தேதி வரை துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பட்ஜெட்டில் தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த முக்கிய வாக்குறுதிகள் சில இடம்பெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் வருகிற 16ம் தேதி (நாளை மறுநாள்) காலை 10.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடக்கிறது. இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
