சென்னை: கத்தார் நாட்டின் முன்னாள் அமீரும், தற்போதைய அமீரின் தந்தையுமான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி காலமானதை தொடர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அனைத்து ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தள கொடிக்கம்பத்திலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, முன்னாள் அமீருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், அரசு துக்கத்தின் காரணமாக நேற்று நாடு முழுவதும் எந்தவித அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.
