சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி நேற்று வெளியிட்ட அறிக்கை: புதிய வாக்காளர் சேர்க்கைக்கான இணையவழி ‘படிவம் 6’ல், பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்களை குறிப்பிடுவதை கட்டாயமாக்கியுள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நிபந்தனைக்கு இந்திய அரசியலமைப்பிலோ அல்லது 1950ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலோ எந்தவித அடிப்படையுமில்லை. தேவையான சட்டத் திருத்தங்கள் ஏதுமின்றி இம்முடிவு தன்னிச்சையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்களிக்கும் உரிமை என்பது ஒருவரின் குடியுரிமை, வயது மற்றும் வசிப்பிடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியலமைப்பு உரிமையாகும். அது ஒருவருடைய பெற்றோரின் தேர்தல் வரலாற்றுடன் தொடர்புடையது அல்ல. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, அனைவருக்கும் பொதுவான வாக்குரிமைக்கு புதிய முட்டுக்கட்டைகளை உருவாக்குமோ என்ற கடுமையான அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
