×

சம்பா சாகுபடியும் பாதிப்பு; எந்த திட்டமும் அரசிடம் இல்லை; காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

 

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரியில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் திறந்து விடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாததாலும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போகும் என்று கணிக்கப்பட்டிருப்பதாலும் நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடியும் நடைபெற வாய்ப்பில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மிக மோசமான இந்த சூழலை சமாளிக்க அரசுத் தரப்பில் எதுவும் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதால், அதை நம்பியும் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராக இல்லை.

இதனால், சம்பா சாகுபடி வழக்கமான அளவான 14 லட்சம் ஏக்கரில் இருந்து 5 முதல் 6 லட்சம் ஏக்கராக குறைந்து விடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பா சாகுபடி இந்த அளவுக்கு குறைந்தால் 16 முதல் 17 லட்சம் டன் நெல் உற்பத்தி குறையும். இது தமிழ்நாட்டில் கடுமையான அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். அரிசி விலைகள் ஏற்கனவே கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ள நிலையில், மேலும் உயரக்கூடும். நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்வதற்கான எந்தத் திட்டமும் தமிழ்நாடு அரசிடம் இல்லை. ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கச் செய்தல், சம்பா தொகுப்பாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி அதன் மூலம் பாசனத் தேவைகளை சமாளித்து சம்பா சாகுபடியை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், தமிழக மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் வெளிச்சந்தை அரிசியையும் வழங்க வேண்டும். குறுவையைப் போலவே சம்பா சாகுபடியும் பொய்த்துப் போவதைத் தடுக்கவும், அது சாத்தியமாகாத நிலையில் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Cauvery Delta ,Anbumani ,Chennai ,PMK ,Karnataka ,Tamil Nadu ,Cauvery ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து