×

பெரம்பூரில் எம்எல்ஏ அலுவலகம், இ-சேவை மையம் திறப்பு; தமிழகத்தில் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

 

சென்னை: புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தை திறந்து வைத்து, தமிழ்நாடு முழுவதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். வியாசர்பாடி மாநகர் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை வியாசர்பாடி, சர்மா நகர் முதல் பிரதான சாலையில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் முதல்வர் விஜய் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் சாய்தள வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமையப்பெற்றுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தில் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக விண்ணப்பிக்க வந்த மக்களிடம் முதல்வர் கலந்துரையாடி, விண்ணப்பித்த 5 பேருக்கு உடனடியாக உரிய சான்றிதழ்களை வழங்கினார். இந்த இ-சேவை மையத்தில், பல்வேறு அரசு துறைகளைச் சார்ந்த 275 சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.3 கோடி மதிப்பீட்டில் பெரம்பூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான தனது பரிந்துரை கடிதத்தை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.

தொடர்ந்து, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள எம்.கே.பி. நகர், சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக்கடையை பார்வையிட்டு, தமிழ்நாடு முழுவதும் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களில் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைக்கும் வகையில், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்களை வழங்கினார். மாவட்டங்களுக்குரிய ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய குடும்ப அட்டைகள் அந்தந்த மாவட்டங்களில் உடனடியாக வழங்கப்படும்.

சென்னை, வியாசர்பாடியில் ரூ.47 கோடியே 50 லட்சம் செலவில் செயல்பட்டுவரும் மாநகர் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையைப் பார்வையிட்டு, பேருந்து மின்னேற்றச் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார். மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதல்வர் அறிவுரையின்படி, இனிவரும் காலங்களில் குளிர்சாதன வசதியுடன்கூடிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு பயணிகள் வசதிக்காக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : MLA ,Perambur ,Tamil Nadu ,CM ,Vijay ,Chennai ,Chief Minister ,Perambur MLA ,Vyasarpadi Municipal Transport… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து