×

பெட்ரோல், எத்தனால், லாபம்; தரவுகளை வெளியிட உத்தரவு: தகவல் ஆணையம் அதிரடி

 

புதுடெல்லி: இந்தியாவில் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. இதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்க முடியும் என ஒன்றிய அரசு கூறினாலும், எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன இன்ஜின்களுக்கு பாதிப்பு ஏற்படுதல், மைலேஜ் குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக பல தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், 2014-15 முதல் ஆண்டுவாரியாக பெட்ரோல் உற்பத்தி, இறக்குமதி, செலவினம், எத்தனால் கலவை விதிமுறைகள், கொள்முதல் மற்றும் பயன்பாடு, பெட்ரோல் விற்பனையால் கிடைத்த லாபம் உள்ளிட்ட ஆறு அம்சங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர் ஒருவர் தரவுகளை கேட்டிருந்தார்.

ஆனால், ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு பகுதியளவு தகவல் மட்டுமே வழங்கியதால் மனுதாரர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த தகவல் ஆணையர் குஷ்வந்த் சிங் சேத்தி , ‘‘பெட்ரோல் உற்பத்தி, இறக்குமதி, எத்தனால் கொள்முதல், கலவை மற்றும் பெட்ரோலியத் துறையின் லாபம் தொடர்பாக இணையதளத்தில் உள்ள தரவுகளை மின்னஞ்சல் மூலம் மனுதாரருக்கு அனுப்ப வேண்டும். எத்தனால் கலவை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் இணைய இணைப்பை வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

Tags : Information Commission ,New Delhi ,India ,Union government ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...