×

5 தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

 

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார். அதேப்போன்று கரூர் தொகுதி எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சி. விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில், இவர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து மேற்கண்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு கடந்த 10ம் தேதி பிறப்பித்த உத்தரவில்,‘‘மேற்கண்ட ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை அறிவிக்க கூடாது’’ என்று தெரிவித்து, வழக்கின் விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் வழக்கின் பிரதான மனுதாரரான வெங்கடாஜலபதி உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில்,‘‘திருச்சி கிழக்கு, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர், பெருந்துறை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசோ அல்லது மூன்றாவது நபர்களோ யாரேனும் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Caveat ,Supreme Court ,New Delhi ,Chief Minister ,Vijay ,Tamil Nadu Assembly ,Trichy East ,Karur ,M.R. Vijayabaskar ,Viralimalai ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...