சென்னை: கரூர் சம்பவத்தை போன்று பாதிக்கப்படுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அரசு பணி வழங்குவதை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், கூட்டணி கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார். அதை தொடர்ந்து, தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகத்தை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவிலும், தமிழக அளவிலும் இணைந்து செயல்படுவோம். விபத்திலோ, வன்முறையிலோ யாராவது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோடு, குடும்பத்தின் தலைமுறையை பாதுகாக்க அரசு பணி வழங்க வேண்டுமென நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
கரூரில் நடந்த கட்சியின் மாநாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அரசு பணி வழங்கலாமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இதை கட்சி சார்ந்தவர்கள் என்று பார்ப்பதைவிட பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்பது முக்கியமானது. கரூர் சம்பவத்தில் மட்டுமல்லாமல் இதுபோன்று பாதிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அரசு பணி வழங்குவதை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒரு உயிரை இழந்து நிற்கும் குடும்பம் எந்த அளவுக்கு சிதைந்து போகும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த விதத்தில் தான் இதை அணுக வேண்டும். தேசிய அளவில் பாஜவை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஒரு அணியால் மட்டுமே முடியும். எனவே, காங்கிரஸ் தலைமையிலான அணி அனைத்து மாநிலங்களிலும் வலிமை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
