×

தவெக இப்போது நடத்திக் கொண்டிருக்கும் குதிரை பேர நிதி எங்கிருந்து வந்தது என்பதை விளக்க வேண்டும்: டி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி

சென்னை: தவெக இப்போது குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறதே?. அந்த நிதி எங்கே இருந்து வந்தது என்பதை விளக்கி சொல்ல வேண்டும் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். திமுக செய்தித் தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ்.இளங்கோவன் நேற்று அளித்த பேட்டி: கரூரில் நடந்த சம்பவம் ஓர் அசம்பாவிதம். ஆனால் கலவரம் நடந்த இடத்தில் இந்த மரணங்கள் நடந்தது போல ஒரு காட்சியை ஏற்படுத்துகிறார்கள். உண்மை நிலைமை என்னவென்றால், மதியம் 12 மணிக்கு அங்கே வந்து பேசுவதாக அறிவிக்கப்பட்டு, மக்கள் காலை 9 மணி முதலே கூட தொடங்கியிருந்தார்கள்.

அந்த மக்களை இரவு 7.30 மணி வரை உச்சி வெயிலில் குடிக்க தண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமல், நெரிசலில் நிற்க வைத்ததனால் அவர்கள் மயக்கம் போட்டு விழுந்தார்களே தவிர, ஒரு தாக்குதல் நடந்தோ அல்லது வேறு காரணங்களாகவோ இல்லை. மயங்கி விழுந்தவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த மக்களை மருத்துவமனையில் சேர்த்த போது மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்ற செய்தி வந்தவுடன், திமுக அரசு நாமக்கல் போன்ற மற்ற சுற்றியுள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களை அனுப்பி, அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சி செய்தது.

ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் விஜய் சென்னைக்கு ஓடி வந்து விட்டார். திமுக தான் இதை செய்தது என்று சொல்கிறார். அசம்பாவிதம் என்றால் அடிதடி, கலவரம் அல்ல. இயல்பான அந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலும் மயங்கி விழுவார்கள். குடிக்க தண்ணீர் இல்லை. சிறுநீர் கழிக்க இடம் கிடையாது. உணவு கிடையாது. காலை வந்தவர்களை இரவு 7.30 மணி வரை காத்திருக்க வைத்திருக்கிறார்கள். சிலருக்கு மாத்திரை சாப்பிடுகிற பழக்கம் இருக்கலாம். மாத்திரை இல்லாமல் அவர்களை நிற்க வைத்ததன் விளைவாக மயங்கி விழுந்தார்கள்.

இதை திசை திருப்பும் விதமாக இவர்கள் பல பொய்களை கட்டவிழ்த்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்றுகிற நடவடிக்கையில் ஈடுபட்டது திமுக. 100 பேர் மயங்கி விழுந்ததில் 60 பேரை காப்பாற்றியிருக்கிறார்கள். 40 பேர் தான் இறந்து போய் இருக்கிறார்கள். விஜய் செய்யவில்லை. அவர் சென்னையில் இருந்தார். அவர் ஓடி வந்து விட்டார். அவர்களை மருத்துவமனையில் கூட பார்க்கவில்லை. இன்றைக்கு அவர் நியாயம் பேசிக்கொண்டு இருக்கிறார்.

சட்டமன்றத்திலே, நாடாளுமன்றத்திலே அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பொய்யை சொன்னால் வெளிநடப்பு செய்வது இயல்பாக நடக்கும் ஒன்று. ‘பார்ட்டி ஃபண்ட் என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால், இவர்கள் இப்போது குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்களே, அந்த நிதி எங்கே இருந்து வந்தது என்பதை விளக்கி சொல்ல வேண்டும். விஜய் 5 நிமிடம் பேசியதால் கொளத்தூரில் வெற்றி கிடைத்து விட்டது என்கிறார். இவர் போகாத தொகுதியிலும் கூட தான் வெற்றி கிடைத்துள்ளது. 10 நிமிடம் பேசியிருந்தால் அவரின் உளறலை தாங்காமல் தலைவரை வெற்றி பெற வைத்திருப்பார்களோ என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Thaveka ,T.K.S.Ilangovan ,Chennai ,DMK Press Communication Committee ,Karur… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து