×

ரயில் பெட்டியை அலங்கரித்த விவகாரம் டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்: அலங்கார நிறுவன ஊழியர் மீது வழக்கு

மும்பை: ரயிலில் முதல் வகுப்பு ஏசி படுக்கை வசதி பெட்டியை முதலிரவு அறைபோல் அலங்கரிக்கப்பட்ட வீடியோ வைரலான நிலையில், இந்த செயலில் ஈடுபட்ட நபர் மீது ரயில்வே நிர்வாகம் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி தனி அறை பெட்டியை சொகுசு ஓட்டலில், ‘ஹனிமூன் சூட்’ போல அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அந்த அறையின் வெள்ளை மற்றும் சிவப்பு நிற பலூன்களும், இருக்கைகளில் ‘ஹார்ட்டின்’ வடிவில் ரோஜா இதழ்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், படுக்கைகளிலும் மலர்கள் தூவப்பட்டு, அருகே ‘ஐ லவ் யூ’ என்ற எழுத்துக்களும் இடம்பெற்றிருந்தன. தங்களின் பயணத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்ற முயன்ற புதுமணத் தம்பதியின் செயல், வீடியோவாக சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை; கடந்த 6ம் தேதி நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த தம்பதியினர், தாங்கள் புக் செய்திருந்த முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியை தனியார் அலங்கார நிறுவனத்தின் மூலம், அலங்கரித்துள்ளனர். உரிய அனுமதியின்றி அந்த அலங்கா நிறுவன ஊழியர் ரயில் பெட்டிக்குள் ஏறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரயிலில் அனுமதியின்றி நுழைந்தது, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது போன்ற குற்றங்களுக்காக, அந்த அலங்கார நிறுவன ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,’ என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags : Mumbai ,Maharashtra ,
× RELATED குஜராத்தில் பயிற்சியின்போது...