×

கோழிக்கோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு 130 ஆண்டு பழமையான கடிகார கோபுரம் இடிந்தது: பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு சந்திப்பு ரயில் நிலையம் கேரளத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் குறிப்பிடத்தக்கதாகும். தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. மிகப் பழமையான இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டு 130 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையை ஒட்டி சுமார் 36 அடி உயர ஒரு கடிகார கோபுரம் உள்ளது.

நேற்று காலை 11.10 மணியளவில் 2வது நடைமேடையில் கோழிக்கோடு-கண்ணூர் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் வழக்கமாக பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்நிலையில் திடீரென கடிகார கோபுரம் இடிந்து நடைமேடையில் விழுந்தது. அந்த சமயத்தில் பயணிகள் ஒருவரும் நடைமேடையில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனால் மங்களூரு- நாகர்கோவில் ஏரநாடு எக்ஸ்பிரஸ், கோழிக்கோடு- திருவனந்தபுரம் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், பெங்களூரு- கோழிக்கோடு- பெங்களூரு எக்ஸ்பிரஸ், நேத்ராவதி எக்ஸ்பிரஸ் உள்பட ரயில்கள் அருகிலுள்ள வெஸ்ட் ஹில், கல்லாயி மற்றும் வெள்ளயில் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. சுமார் 5 மணிநேரத்திற்கு பின் ரயில் போக்குவரத்து வழக்கம் போல நடைபெற்றது.

Tags : Kozhikode railway station ,Thiruvananthapuram ,Kozhikode Junction railway station ,Kerala ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...