×

கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்: மாணிக்கம் தாகூர் டிவிட்

சென்னை: கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது என்று மறுப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என்று மறுப்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை நேரடியாக அவமதிக்கும் செயலாகும். பருவமழை பொய்த்தது என்பது, கூட்டாட்சி ஒத்துழைப்பைப் புறக்கணிப்பதற்கோ அல்லது நம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கோ வழங்கப்பட்ட உரிமம் அல்ல.

உச்ச நீதிமன்றத்தின் 2018 இறுதி தீர்ப்பை கர்நாடகாவிற்கு நினைவூட்டுகிறோம். ‘‘மாநிலங்களுக்கு இடையேயான நதியின் நீர்… ஒரு தேசிய சொத்து, எந்தவொரு தனி மாநிலமும் அதன் மீது பிரத்யேக உரிமையைக் கொண்டாட முடியாது” காவிரி மேலாண்மை வாரியம் ஜூன் மாதத்திற்கு 9.91 டிஎம்சி மற்றும் ஜூலை மாதத்திற்கு 32 டிஎம்சி தண்ணீரை திறக்க தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

வறட்சிக் காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரை பகிர்ந்து கொள்ளும் முறையை உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. பற்றாக்குறை ஏற்படும் போது, அது ஒட்டுமொத்த படுகைக்கும் விகிதாச்சாரப்படியே பிரிக்கப்பட வேண்டும். கர்நாடகா தன்னிச்சையாக அணை கதவுகளை மூட முடியாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, காவிரி மேலாண்மை வாரியம், குறிப்பிட்டுள்ள கால அட்டவணையைப் பின்பற்றி, தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Karnataka Irrigation ,Tamil Nadu ,Supreme Court ,Manickam Thakur ,Chennai ,Karnataka ,Congress ,Karnataka Irrigation… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து