×

மதம் மாறிய இஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு உரிமைக்கான சட்டத்திருத்தம் தேவை: முன்னாள் நீதிபதி, முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை: சிறுபான்மை மக்களுக்கு எதிரான தீர்ப்புகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர், சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது: மதம் மாறிய இஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு தொடர்பான சமீம் அகமது வழக்கின் தீர்ப்பில், இஸ்லாமை ஒட்டுமொத்தமாக மதமாற்ற மதமாக சித்தரிக்கும் வகையிலான கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கை சட்டப்படி முடிவு செய்வதற்கு அவசியமில்லாத இத்தகைய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்து ஒரு குறிப்பிட்ட மதத்தை தேவையின்றி குறிவைப்பதாக புரிந்துகொள்ளப்படும். அதேபோல் தவெக அரசு பொறுப்பேற்றதும் அமைப்புகள் மற்றும் இயக்கத்திற்கு சுதந்திரமாகிவிட்டது என கூறுகிறார். சமீம் அகமது வழக்கில், ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பி பெற வேண்டும். மேலும் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மதம் மாறிய இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநிறுத்தும் வகையில் சட்டத்தில் தேவையான திருத்தங்களை தமிழக அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்.

இதுவே, நிரந்தரமான மற்றும் சட்டப்பூர்வமான தீர்வாக அமைப்பும். அதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களின் சமூக மற்றும் கல்வி நிலை, மதம் மாறிய இஸ்லாமியர்களின் சமூக, கல்வி நிலை குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் விரிவான ஆய்வறிக்கையை தமிழக அரசு பெற்றிட வேண்டும்.  மேலும் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உகந்தது அல்ல. மாறாக அரசாணை எண் 31 தொடர்பாக இரு நீதிபதிகள் அமர்வுகள் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையில், இப்பிரச்னையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைத்து விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவரை அரசாணை எண் 31 செல்லுபடியாகும் என நடைமுறைப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் செல்வதை விட, வரும் கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற வேண்டும். அரசியல் சட்டத்திற்கு முரணாக தொடர்ந்து செயல்படுவதுடன், நீதிபதியாக பதவியேற்கும் போது அரசியல் சட்டத்தின் பிரிவு 219ன் கீழ் எடுத்துக்கொண்ட உறுதிமொழியையும் மீறியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இந்திய பாராளுமன்றம் பதவி நீக்க நடவடிக்கையை தொடங்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அவர்மீது உள் விசாரணை நடத்த வேண்டும்.

மேலும், சிறுபான்மையினர் தொடர்பான வழக்குகளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் விசாரிப்பதற்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் மாதத்தின் 3வது வாரத்தில் சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளை ஒருங்கிணைத்து மாபெரும் கோரிக்கை மாநாடு நடத்த தீர்மானித்துள்ளோம். அரசியல் சட்டத்தையும், ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாக்க விரும்பும் தமிழகத்தின் அனைத்து ஜனநாயக சக்திகளும் இம்மாநாட்டில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறு கூறினர்.

Tags : Chennai ,Ari Paranthaman ,minister ,Mano Thangaraj ,MLA ,Jawahirullah ,Chennai Press Club ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து