×

நீதித்துறை குறித்த விஷயங்கள் நீக்கத்தோடு 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் பல்வேறு மாற்றங்கள்: என்சிஇஆர்டி திருத்தி வெளியீடு

புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கடந்த பிப்ரவரியில் வெளியிட்ட 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல், நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற பாடப்பிரிவுகளை சேர்த்திருந்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து தடை விதித்ததைத் தொடர்ந்து, நீதித்துறை தொடர்பான பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டு திருத்தப்பட்ட புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில், நீதித்துறை தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டதோடு வேறு பல திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடியுரிமை: உரிமைகளும், கடமைகளும் என்ற அத்தியாயத்தில், ‘‘சாதி, மதம், இனக்குழு, மாற்றத்திறன், இனம், உடல் தோற்றம், பாலினம், பாலியல் ஈர்ப்பு அல்லது பொருளாதார பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நபரையோ, குழுவையோ தவறாக நடத்துவதே பாகுபாடு ஆகும். இது நெறிமுறையற்றது மட்டுமில்லாமல், சட்டப்படி தடை செய்யப்பட்டதும் ஆகும்’’ என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பாகுபாட்டிற்கான காரணங்களில் பொருளாதார பின்னணியும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்தியாவின் நீண்ட சுதந்திர பயணம் என்ற தலைப்பிலான வரலாற்று பாடப்பகுதியில், இந்திய பிரிவினை இந்திய தேசிய காங்கிரசாலேயே பரவலாக எதிர்க்கப்பட்டது என்றும், அதை ஏற்றுக் கொள்வதே அடுத்தகட்டத்தை நோக்கி செல்வதற்கான ஒரே வழியாக இருந்ததா என்பது இன்றும் விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘1925ல் சாவர்க்கரும் சுயராஜ்யத்திற்கான (முழு சுதந்திரம்) இதே போன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார்” என்ற தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.

‘‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒரு படையை உருவாக்க ஹிட்லரின் ஆதரவை நாடினார். ஹிட்லர் இனவெறி கொண்ட நாஜி சித்தாந்தம் மற்றும் விரிவாக்கக் கொள்கை லட்சியங்கள் மூலம் 2ம் உலகப் போரைத் தூண்டிய சர்வாதிகாரி’’ என்று முந்தைய புத்தகத்தில் இருந்தது நீக்கப்பட்டு, ‘போஸ் ஆங்கிலேயர்களுக்கு எதிரான சக்திகளிடம் ஆதரவை நாடினார்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது
ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2023-24 மற்றும் 2025-26 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சுமார் 86 லட்சம் குறைந்துள்ளதாகவும், அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதி உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 88 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக நாடு முழுவதும் பள்ளி செல்லும் குழந்தைகளில் சுமார் 10 பேரில் 7 பேர் பள்ளிக்கு செல்லாமலோ அல்லது தங்களின் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடாமலோ இருந்ததாக தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : NCERT ,New Delhi ,National Council of Educational Research and Training ,Supreme Court ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...