நன்றி குங்குமம் டாக்டர்
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் நோய்களுக்குப் பஞ்சமில்லை. சற்று வயதாக ஆரம்பித்தாலே நோய்கள் தேடி வருகின்றன. அந்தவகையில் இப்போது வயதானவர்கள் என்றில்லை வயது வித்தியாசமின்றி மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். நமது உடலில் எலும்புகள் இணையும் இடம்தான் மூட்டு, இதில் தோள்பட்டை, கைமூட்டு, கை மணிக்கட்டு, கால்மூட்டு, இடுப்புமூட்டு, கால்பாதம் ஆகிய ஆறு மூட்டுகள் முக்கியமானவையாகும்.
வலி எதனால் வருகிறது?
மூட்டுவலி என்பது மேற்சொன்ன பகுதிகளில் ஏற்படும் அசெளகரிய உணர்வு, வலி, சோர்வு, வீக்கம் என அங்கு ஏற்படும் அனைத்து உணர்ச்சிகளையும் குறிக்கும். மூட்டுவலி வருவது இயல்புதான் என நினைத்து, பெரும்பாலானோர் அதைப் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால், இயல்புக்கு மீறிய எந்த வலியையும் அப்படி உதாசீனப்படுத்தக்கூடாது. மூட்டு வலிக்கான காரணங்கள், சிகிச்சைகள் குறித்து எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் ஒருவரிடம் கேட்டறிந்த தகவல்களின் சுருக்கம்.
மூட்டு வலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்றுதான் பலரின் எண்ணமாக இருக்கிறது. வயதாகும்போது, உடல் சார்ந்த உபாதைகளின் சதவிகிதம் அதிகரிப்பதால், மூட்டு வலியின் தீவிரமும் அதிகரிக்கிறது. ஆக, வயதாகும்போது மூட்டு வலியின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, அது வயதான காலத்தில் ஏற்படும் நோய் என்று நினைப்பது தவறு.
உடல் பருமன், மரபு, உடலுழைப்புக் குறைவு, மெனோபாஸ் காலகட்டத்தைத் தாண்டிய பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காசநோய், சர்க்கரைநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு மூட்டுவலி இருக்கும். சரியான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் காலப்போக்கில் அதன் பாதிப்பு அதிகரிக்கக் கூடும்.
முழங்கால் மூட்டு, இடுப்பு, முதுகுத் தண்டுவடம், கழுத்து, தோள்பட்டை, கை மணிக்கட்டு ஆகிய இடங்களில் வலி ஏற்படலாம். இவற்றில் பொதுவாக அதிகமானோரைப் பாதிப்பது இடுப்பு வலி, கழுத்து வலி, முழங்கால் மூட்டு மற்றும் தோள்பட்டை வலி.
நீண்ட நாள் பாதிப்பு
நீண்ட நாள் பாதிப்பு வகைகளில் ஒன்றான மூட்டு வலியில், வலி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்கும். எனவே முதல் நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிந்து, அதற்கேற்ப வாழ்வியலில் மாற்றங்களைச் செய்வது, சிகிச்சை போன்றவற்றால் வருங்காலத்தில் பாதிப்பின் தீவிரம் குறைக்கலாம். உதாரணமாக, அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவற்றை சரியாகச் செய்ய வேண்டும்.
அதேநேரம் எந்தெந்த உடல் அசைவுகளைத் தொடர்ந்து செய்தால் பாதிப்பு அல்லது வலி உணர்வு அதிரிக்கிறது. என்பதைத் தெரிந்துகொண்டு, அவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி உட்கார்ந்து எழுவது, படிக்கட்டுகளில் அதிகம் ஏறுவதால் வலி எடுத்தால் அவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
பரிசோதனைகள்
மூட்டு வலியைத் தவிர வேறு ஏதாவது உடல் கோளாறுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய நோயாளியின் மருத்துவ அறிக்கையை மருத்துவர் கண்காணிப்பர். அதைப் பொறுத்து, உடல் சார்ந்த பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும். மேலும், எக்ஸ்ரே மூலம் எலும்பில் பாதிப்புகள் ஏதும் இருக்கிறதா என்பதும், ரத்தப் பரிசோதனை மூலம் தொற்று நோய் பாதிப்பு உள்ளதா என்பதும் கண்டறியப்படும்.
தீர்வு என்ன?
ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கும் மூட்டு வலிகள்யாவும், தேவையான ஓய்வு கொடுத்தாலே சரியாகிவிடும். சரியாகாமல் இருக்கும் வலிகளுக்கு, மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை அவசியம். பாக்டீரியா தொற்றாக இருந்தால், அறுவைசிகிச்சை செய்யப்படும். மேலும் ஆன்டிபயாடிக் தெரபி பரிந்துரைக்கப்படும்.
காசநோய், சர்க்கரைநோய் போன்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு, அதன் பக்க விளைவு காரணமாகக் கூட மூட்டுவலி ஏற்படலாம். அப்படி இருந்தால், அவர்களின் நோயைக் கட்டுக்குள் வைப்பதற்கான சிகிச்சை அளிக்கப்படும். முதுகுத் தண்டுவடம் மற்றும் இடுப்பில் அதிகம்வலி ஏற்படுவது அன்கைலாசிங் ஸ்பாண்டிலைட்டிஸ் என்ற பிரச்னையாக இருக்கலாம். இவற்றைத் தடுக்க மருந்து மாத்திரைகளே பரிந்துரைக்கப்படும்.
இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு, பாதிப்பின் கடைசி நிலையில் இருப்பவர்களுக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்படும். எந்தவொரு மூட்டு வலிக்கும் நிரந்தரத் தீர்வு கிடையாது என்பதை நோயாளிகள் உணர வேண்டும்.
மூட்டு வலி பெண்களுக்கானதா?
மூட்டுவலி பெண்களுக்கான பிரச்னையா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதற்கான விளக்கம்தான் இது. மூட்டுகளின் நெகிழ்வுத் தன்மைக்கு உதவும் கார்டிலேஜ் உருவாக்கத்துக்கு, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உதவும். ஹார்மோன் சுரப்பு குறைந்தால், மூட்டுப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காரணமாக, இதன் சுரப்பு ஒவ்வொரு மாதமும் குறையும்.
மெனோபாஸ் காலத்தைத் தாண்டிய பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் மிகக் குறைவாகவே சுரக்கும். எனவே, மூட்டுவலி ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். உடல் பருமன் இருப்பவர்களுக்கு, மூட்டுவலி ஏற்படுவது இயல்பு, உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பதால், அவர்களுக்கு மிக எளிதாக மூட்டுவலி பிரச்னை ஏற்பட்டு விடுகிறது.
ஆகவே பெண்கள் தங்கள் உடல் நலனில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். முக்கியமாக, உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடலுழைப்பு நிறைந்த ஏதாவதொரு பழக்கத்தை அன்றாடப் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக நடைப்பயிற்சி, சைக்ளிங், நீச்சல் ஏதாவதொன்றில் தினமும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். தசைக்கான உடற்பயிற்சிகளைத் தினமும் செய்ய வேண்டியது அவசியம்.
தொகுப்பு: இயன்முறை மருத்துவர் நித்யா மூர்த்தி
