பள்ளிபாளையம், ஜூலை 8: நாமக்கல்-ஈரோடு தனியார் பேருந்துகளில் ரூ.7 கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் வாக்குவாதம் செய்ததால் தனியார் பஸ் காவல்நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. பயணிகளை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
நாமக்கல்லில் இருந்து நேற்று முன்தினம் மாலை தனியார் பேருந்து ஈரோட்டிற்கு புறப்பட்டது. பேருந்து புறப்படும் நேரத்தில் பஸ்சுக்குள் வந்த கண்டக்டர், நேரமாகி விட்டதால் வழியில் உள்ள ஊர்களில் பஸ் நிற்காது என்றார். அப்போது, பள்ளிபாளையத்திற்கு டிக்கெட் கேட்ட பயணிகளிடம் பஸ் ஊருக்குள் செல்லாது. எனவே, மேம்பாலத்தில் இறங்கி கொள்ள வேண்டுமென நடத்துனர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பயணிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கமான வழித்தடத்தில் செல்லாமல் பயணிகளை அலையவிடலாமா என கேள்வி எழுப்பினர். மேலும், ஈரோடு செல்லும் பயணிகளிடம், கண்டக்டர் ரூ.7 கூடுதலாக கட்டணம் வசூலித்துள்ளார். இந்த திடீர் கட்டண உயர்வுக்கு பயணிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூடுதல் கட்டணம் கொடுக்க மறுத்த மூதாட்டி பஸ்சிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டார். இதுதொடர்பாக பயணிகளுக்கும் கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆலாம்பாளையம் வந்ததும் பள்ளிபாளையத்திற்குள் செல்லாமல் ஓட்டுனர் மேம்பாலத்தில் ஏற்றியுள்ளார். பள்ளிபாளையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தாமல் காவிரி பாலத்தில் இறக்கி அலைகழிப்பதாக எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளனர்.
பள்ளிபாளையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்வதை கண்ட ஈரோடு செல்லும் பயணிகள், தாங்கள் ரயிலை பிடிக்க வேண்டியுள்ளதால், வாக்குவாதத்தை தவிர்த்து பேருந்தை ஈரோட்டிற்கு விடுமாறு பள்ளிபாளையம் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஓட்டுனர் பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு பேருந்தை திருப்பினார். பயணிகள் பலரும் தகராறு செய்வதாக புகார் செய்தார்.
பயணிகளும் காவல்நிலையத்திற்குள் சென்று, அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், பள்ளிபாளையம் நகரத்திற்குள் செல்லாமல் பேருந்தை மேம்பாலத்தில் ஏற்றி காவிரி ஆற்று பாலத்தில் பயணிகளை இறக்குவதால், தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இருதரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தினர். ஈரோடு பயணிகள் தங்களுக்கு தாமதமாவதாக கூறியதால், அனைவரையும் சமரசப்படுத்திய போலீசார் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக பேருந்து ஈரோடு புறப்பட்டது.
