×

மேலும் 12 அதிமுக எம்எல்ஏக்களை தூக்கி ஆட்டத்தை தொடர்வார் விஜய்: ஷாக் கொடுக்கும் மாஜி அமைச்சர் உதயகுமார்

மதுரை: முதல்வர் விஜய் மேலும் 12 அதிமுக எம்எல்ஏக்களை தூக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: அதிமுக எம்எல்ஏக்களை தொடர் ராஜினாமா செய்ய வைத்து, குதிரை பேரத்தில் தவெக அரசு முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு, ஆட்சி அமைக்கும் பெரும்பான்மைக்கென தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களை சந்த்கித்து விஜய் அன்பை பரிமாறிக் கொண்டார்.

அமைச்சர் பதவி ஆசை காட்டி அதிமுக குடும்பத்தில் பிளவைத் தந்து, அதிமுக பொதுச்செயலாளரை சந்திக்காமலே அரசியல் மரபுகளை, சட்ட விதிகளை மீறி, அதிமுக எம்எல்ஏக்கள் சிலரை அவர்களின் இருப்பிடமே சென்று சந்தித்து அரசியல் ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். இதுவரை 6 அதிமுக எம்எல்ஏக்களை தூக்கி, ராஜினாமா செய்ய வைத்த அபத்தமான அரசியல் ஆட்டத்தை விஜய் தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறார். மேலும் 12 பேர் வரையிலும் ஆட்டத்தை தொடர்வார் என செய்திகள் வருகிறது.

அதிமுக, எடப்பாடி பழனிசாமி மீது விஜய்க்கு இந்த வன்மம்? அதிமுகவை தனிமைப்படுத்தினால், தவெகவை தேசிய அளவிலே வளர்க்கலாமென நினைக்கிறார்கள். இப்படியே போய்விடாது. காலம் மாறும். அப்போது அரசியலிலே கடும் பின்னடைவுகளை விஜய் சந்திக்கிற தீர்ப்புகளும் வரும். விஜய் ஒன்றும் அவதார புருஷனில்லை. தமிழ்நாட்டை காக்க வந்த கடவுளுமல்ல. தலைகால் புரியாமல் ஆடுகிற ஆட்டம் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்?.
இவ்வாறு பேசியுள்ளார்.

* ‘அதிமுகவில் டிடிவி-சசிகலா இணைய வாய்ப்பு’
ஈரோட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசுகையில், ‘‘கூடிய விரைவில் தவெக அரசு போக (கவிழ) வாய்ப்புள்ளது’’ என்றார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில்,“முன்னாள் அமைச்சர்கள் தவறை மறைக்கவும், சொத்தை காப்பாற்றவும், வழக்கில் இருந்து தப்பிக்கவும் தவெக.வுக்கு செல்கின்றனர்” என்றார். அதிமுக, திமுக கூட்டணி பேசியது தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு, அதிமுக-திமுக கூட்டணி முயற்சித்ததை நிரூபிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

அதிமுகவுக்கு யாரு வந்தாலும் சேர்ப்போம், ஒன்றிணைவோம் என்றார். டிடிவி மற்றும் சசிகலா இணைவார்களா? என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள், டிடிவி-சசிகலா அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்புள்ளது என்றார். தவெக குதிரை பேரத்தில் ஈடுபடாமல் எப்படி அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தவுடன் தவெகவில் இணைந்தார்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள் என்று பதிலளித்தார்.

Tags : Maji Minister ,Udayakumar ,Madurai ,Chief Minister ,Vijay ,former minister ,R. B. Udayakumar ,R. B. ,Government of Daveka ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர், இரட்டை இலை...