×

போலி அரசு ஆவணங்கள் தயாரிப்பு: 2 பேரை அதிரடியாக கைது செய்த டெல்லி போலீஸ்

டெல்லி: போலியான அரசு அடையாள ஆவணங்களை இணையதளம் மூலம் தயாரித்து விற்பனை செய்யும் மாநிலங்களுக்கு இடையிலான மோசடிக் கும்பலை சேர்ந்த இருவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட போலி அரசு ஆவணங்களை தயாரித்து வழங்கிய இணையதளத்தை இயக்கிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலி அரசு ஆவணங்களை வழங்க ரூ.20 முதல் ரூ.50 வரை கட்டணம் வசூலித்ததும் அம்பலமாகி உள்ளது. இவர்கள் மூலம் 500-க்கும் மேற்பட்டோர் போலி ஆவணங்களை பெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிதேஷி சா மற்றும் சந்தோஷ் குமார் என அடையாளம் காணப்பட்ட இரண்டு குற்றவாளிகள் முறையே டாமன் & டையூ மற்றும் பாட்னாவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை bkprint.in என்ற இணையதளம் மூலம் போலி அரசு அடையாள ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாக குற்றம்சாட்டி உள்ளது. இந்த இணையதளம் வழியே ஆன்லைனில் பணம் செலுத்துபவர்களுக்குப் போலி ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், பான் தொடர்பான ஆவணங்கள், வசிப்பிடச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்கள், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பிற அரசு ஆவணங்களைப் போன்ற போலி பதிவுகளை வழங்கியுள்ளது.

இந்த மோசடி நபர்கள் வழங்கிய போலியான ஆவணங்கள் உண்மையான அரசுப் பதிவுகளை மிகவும் ஒத்திருப்பதாகவும், அவற்றை அடையாளத் திருட்டு, ஆள்மாறாட்டம், நிதி மோசடி, ஏமாற்றுதல் மற்றும் மோசடியான வழிகளில் உண்மையான அரசு ஆவணங்களைப் பெறுவதற்கு தவறாகப் பயன்படுத்த கூடும் என்றும் காவல்துறை கூறியது. மேலும் இவர்கள் வழங்கும் போலி ஆவணங்கள் உண்மையானது போலக் காட்டுவதற்காக, அதில் போலி QR குறியீடுகளையும் இணைத்துள்ளனர்.

கண்டுபிடித்தது எப்படி?

டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவினர் ஆன்லைனில் மோசடி தொடர்பான கண்காணிப்பில் ஈடுபட்டபோது இந்த முறைகேடு அம்பலமானது. போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு போலி கணக்கைத் தொடங்கி, அதில் பணம் செலுத்தி, முற்றிலும் தவறான விவரங்களைக் கொடுத்து ஒரு போலி ஆதார் கார்டை தயாரிக்க கோரினார். அவர்களும் குறைந்த செலவில் இணையதளம் மூலம் போலி ஆவணத்தை வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த இணையதளத்தின் UPI பணப் பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி எண்களை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், அடையாள திருட்டு மற்றும் நிதி மோசடிகளைத் தடுக்க கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Delhi Police ,Delhi ,Aadhaar ,
× RELATED கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில்...