×

ஓசூரில் ஆம்னி பேருந்தில் ரூ.40 லட்சம் போதை பவுடரை கடத்திய பட்டதாரி வாலிபர் கைது

*நண்பருக்கு வலை

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அதனை போலீசார் நிறுத்தி, பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

இந்த சோதனையில், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் செல்வராஜ் நகரை சேர்ந்த அருண்பாண்டியன் (32) என்பவர் கொண்டு வந்த பேக்கில், 81 கிராம் கோகைன் போதை பவுடர் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அதனை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.40 லட்சம் என தெரியவந்தது.

இதை தொடர்ந்து, அருண்பாண்டியனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், இன்ஜினியரிங் பட்டதாரியான அவர், புதுச்சேரியில் பணியாற்றிய போது, அக்கினியரசு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர் அருண்பாண்டியனை கோவா அழைத்து சென்று, `கோகைன்’ போதை பவுடரை வாங்கி கொடுத்து விட்டு, பெங்களூரு வழியாக சென்னை வருமாறு கூறி விட்டு, கோவாவில் இருந்து விமானத்தில் சென்றது தெரிந்தது. இந்த பவுடரை சென்னையில் சென்று சேர்த்தால் தனக்கு 5,000 ரூபாய் கிடைக்கும் என போலீசாரிடம் அருண்பாண்டியன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அக்கினியரசுவை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Hosur ,Jujuwadi ,Hosur, Krishnagiri district ,SIPCOT police ,Bengaluru ,Chennai ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை