×

புதுக்கோட்டை சிப்காட் அருகே அமைச்சர் வருகைக்காக காத்திருந்த மாணவர்கள்

*கற்றல் மையத்தின் திறப்பு விழாவில் அவலம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை சிப்காட் அருகே அமைச்சர் வருகைக்காக ஒன்றரை மணி நேரம் காத்திருந்த மாணவர்கள் கற்றல் மையத்தின் திறப்பு விழாவில் அவலம்.

புதுக்கோட்டை சிப்காட் அருகே உள்ள காமராஜ் நகர் தனியார் அமைப்பு மூலம் கற்றல் மையத்தின் திறப்பு விழா நேற்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விழாவில், தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் பங்கேற்று மையத்தை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சரை வரவேற்பதற்காக ரெங்கம்மாள் சத்திரம் மற்றும் வடசேரிப்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் காலை முதலே வரவழைக்கப்பட்டிருந்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற பள்ளியில் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், காலை 9:30 மணிக்கு வரவேண்டிய அமைச்சர், 10:50 மணி வரை வராததால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருக்கக்கூடிய அவல நிலை ஏற்பட்டது. அவ்வாறு காத்திருந்த பள்ளி மாணவர்கள், அப்பகுதியில் இருந்த சுற்றுச்சுவரில் ஏறி நின்று கட்டிடங்களில் தொங்கி விளையாடியது அங்கிருந்தோரை அச்சமடைய வைத்தது.

முன்னதாக, காலை 7:30 மணிக்கு கூடலூரில் பள்ளி மாணவர்களின் கோரிக்கையின் படி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர ஏதுவாக பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த அமைச்சர், அங்கிருந்து நேரடியாக இந்த விழாவிற்கு வராமல், தனது இல்லத்திற்கு சென்று விட்டு, பின்னர் திருச்சி விமான நிலையம் செல்லும் வழியில் இந்த மையத்தை திறக்க திட்டமிட்டதே இந்த தாமதத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

தொடர்ந்து, காலை 11 மணிக்கு காமராஜ் நகருக்கு வருகை தந்த அமைச்சர் முகமது பர்வேஸிற்கு மாணவர்கள் சிலம்பம் சுற்றி வரவேற்பு அளித்தனர்.பின்னர் கற்றல் மையத்தை திறந்து வைத்து, மரக்கன்று நட்டு விட்டு அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ​

பள்ளி வேளையில், படிப்பைக் கவனிப்பதை தள்ளி வைத்துவிட்டு, அமைச்சரின் வருகைக்காக அரசுப்பள்ளி மாணவர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட இச்சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Pudukkottai Cipkat ,AVALAM ,LEARNING CENTER ,PUDUKKOTTAI ,PUDUKKOTA CHIPKOT ,Kamaraj Nagar ,Structure ,Pudukkottai Ciphkat ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து