×

லாஸ்ட் பெஞ்ச் சர்ச்சை தாழ்வு மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்காதீங்க… அமைச்சர் கீர்த்தனாவிற்கு அன்பில் மகேஷ் கண்டனம்

சிவகாசி: மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள் என அமைச்சர் கீர்த்தனாவிற்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் சீ.ரா. அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சில தினங்களுக்கு முன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளை கேட்டார். அமைச்சரின் ஆங்கில கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மாணவிகள் திணறினர்.

அப்போது அமைச்சர் கீர்த்தனா, `‘முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்’’ எனக் குறிப்பிட்டு பேசினார். அங்கிருந்த ஆசிரியர்களிடமும் கேள்வி எழுப்பினார். இது தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விவாதப் பொருளாக மாறியது. ஆங்கிலம் சரளமாக பேச முடியாமல் தடுமாறும் மாணவியின் முகத்தை படம் பிடித்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது ஒரு அமைச்சருக்கு அழகா என விமர்சிக்கப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில்,  ‘‘தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல! பள்ளிகளுக்கு செல்லும் போது மாணவர்களையும் ஆசிரிய பெருமக்களையும் ஊக்கப்படுத்துவதே முதன்மையான கடமையாக இருக்க வேண்டும். அதை விடுத்து கடைசி பெஞ்ச் என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள். தப்போ, சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்’’ என பதிவிட்டுள்ளார்.

* ஆய்வு அல்ல அராஜகம்: நயினார் பாய்ச்சல்
பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“ஆய்வு” என்ற பெயரில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசுப் பள்ளிக்கு கேமராக்களுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை குத்திக் காட்டி, மாணவர்கள் முன்னிலையிலேயே அங்குள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைக் குறை கூறி, “Last Bench” மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என்று லேபிள் ஒட்டிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.

நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போல, படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டு அவர்களை திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் “ஆய்வு” கிடையாது, “அராஜகம்”. செல்லுமிடமெல்லாம் அதிகாரிகளை விட, கேமராமேன்களை கையோடு அழைத்துச் செல்லும் தவெக அமைச்சர்கள், “ஆய்வு செய்வது எப்படி” என்பது குறித்த அடிப்படையை தெரிந்து கொள்வது அவசியம். அதைவிட்டு விட்டு படிக்கும் பிள்ளைகளிடம் இப்படி தாழ்வு மனப்பான்மையை விதைக்க முயலக் கூடாது.

எனவே, முதல்வர் விஜய், களப்பணியில் அனுபவமற்ற தனது அமைச்சர்களுக்கு ஆய்வு செய்வதற்கான முறையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும். மேலும், தன்னைக் கற்றறிந்த ஞானி போல காட்டிக் கொள்வதற்காக அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, அதை கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட அமைச்சர் கீர்த்தனா மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Anbil Mahesh ,Minister ,Keerthana ,Sivakasi ,Former Minister ,Minister Keerthana ,Virudhunagar District ,Sivakasi Corporation Tiruthangal C.R. Tamil Nadu ,Industries ,Government Girls' Higher Secondary School… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து