×

திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணை குளமாக மாறிய அவலம்: மழையின்றி போனதால் பரிதாபம்

 

பட்டிவீரன்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்றி போனதால், திண்டுக்கல் மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணை குளம்போல் மாறியுள்ளது. திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 23.6 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் பூஜ்ஜியத்திற்கும் குறைவானச்சென்று மைனஸ் 4 அடியாக இருக்கிறது. பெரும்பாறை, மஞ்சள்பரப்பு உள்ளிட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில், மழையேதும் இல்லாத காரணத்தினால், அணைக்கு நீர் வரத்து முற்றிலுமாக இல்லாமல் இருக்கிறது.

இதேபோல் புல்லாவெளி நீர்வீழ்ச்சியிலிருந்து குடகனாறு வழியாக அணைக்கு தண்ணீர் மிக குறைவான அளவில் மட்டுமே வருகின்றது. இதன்படி நீரின்றி பரிதாப நிலையில் இருக்கும் காமராஜர் அணையிலிருந்து திண்டுக்கல்லுக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள், ஆத்தூர், சீவல்சரகு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கும் இந்த அணையின் உதவியுடன் குடிநீர் வழங்கப்படுகிறது.

தற்போது அணையின் நீர்மட்டம் பூஜ்ஜியத்திற்கும் குறைவாக உள்ளதால் திண்டுக்கல் நகராட்சி மற்றும் சித்தையன்கோட்டை உள்ளிட்ட பேரூராட்சி, கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அணை முழு கொள்ளவை எட்டியது. அதன்பின்பு போதிய மழை இல்லாததாலும், கோடை வெயில் காரணமாகவும் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பருவமழை தொடங்கி போதிய அளவில் பெய்தால் மட்டுமே, அணைக்கு நீர் வரத்து இருக்கும் என பொதுப்பணித்துறையினர் கூறியுள்ளனர்.

Tags : Atur Kamarajar Dam ,Dindigul ,Klumbol ,
× RELATED சூறைக்காற்றால் கடலுக்கு செல்ல தடை;...