ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் கடும் மணல் புயலால் அரிச்சல்முனை சாலையை மணல் மூடியது. இதனால் சுற்றுலாப்பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை வீசும். இந்தாண்டு முன்கூட்டியே துவங்கிய நிலையில், பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பலத்த காற்று வீசி வருகிறது. ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் பலத்த காற்றால் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை இருபுறமும் உள்ள மணல் மேடுகள் சூறைக்காற்றில் அடித்து சாலையில் மணல் புயலாக பறக்கிறது.
கடந்த ஒரு மாதமாக வீசிய கடும் மணல் புயலால், அரிச்சல்முனை சாலையில் வாகனங்கள் புதைந்து செல்லும் அளவுக்கு மணல் குவியல் உருவாகியுள்ளது. இங்கு வரும் சுற்றுலா வாகனங்கள் மணலில் சிக்கி சிரமத்துடன் கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ரவுண்டானா சாலையில் கால்கள் புதையும் அளவுக்கு சாலை முழுவதும் மணல் தேங்கி கிடக்கிறது. சாலைகள் மறைந்ததால் அரசு பேருந்து உள்ளே வந்து திரும்பி செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள் ரவுண்டானா சாலைக்கு முன்பு 500 மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுகிறது.
போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய அங்கு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படாததால், சுற்றுலா வாகனங்கள் சாலையில் இருபுறமும் இடையூறாக நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து வரும் வாகனங்கள் நீண்ட தொலைவில் சுற்றுலாப்பயணிகளை இறக்கி விடுவதால் வெகுதூரம் மணல் காற்றில் நடந்து சென்று சுற்றி பார்க்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் மீன் ஏற்றிச்செல்லும் உள்ளூர் சரக்கு வாகனங்கள் மணலில் சிக்கி சிரமத்துடன் செல்கின்றன. சுற்றிப் பார்க்க ஆட்டோக்களில் செல்லும் சுற்றுலாப்பயணிகள் மணல் பகுதியில் இறங்கி ஆட்டோவை தள்ளிவிட்டு அவதிக்கு ஆளாகின்றனர்.
அரிச்சல்முனை வரை சென்று திரும்பும் அனைத்து சுற்றுலா வாகனங்களில் மணல் படிந்து காணப்படுகிறது. தனுஷ்கோடி லைட் ஹவுஸ் பகுதியில் காற்றில் மணல் அதிகமாக பறப்பதால், சுற்றுலாப்பயணிகள் காரில் இருந்து இறங்காமல் சென்று விடுகின்றனர். அரிச்சல்முனை சாலையில் தேங்கி கிடக்கும் மணல் குவியலை உடனே அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
