ராமேஸ்வரம்: சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் 3,500 படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால் 10 ஆயிரம் மீனவர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய இரு கடற்பகுதியிலும் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் அதிகபட்சமாக 60 கிமீ வேகம் வரையிலும் வீசும் என அறிவிக்கப்பட்டது. இதனால், திடீரென ராட்சத அலைகள் எழும் என்பதால், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம், மீன்வளத்துறை எச்சரிக்கை அறிவிப்பு செய்தது. இதனால் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதிக்கு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தேவிப்பட்டினம், தொண்டி, எஸ்பி.பட்டினம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து நேற்று கடலுக்கு செல்ல மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கவில்லை.
இதன்படி மண்டபத்தில் 600, பாம்பனில் 150, ராமேஸ்வரத்தில் 750 என மொத்தம் 1,500 விசைப்படகுகள் நேற்று கரைநிறுத்தம் செய்யப்பட்டன. இதேபோல் 2,000 நாட்டுப்படகுகளும் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை விலகிய பிறகே மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
