×

வெனிசுலாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமியின் உடலில் முக்கிய பாகங்கள் மாயம்: உயர்நிலை விசாரணை நடத்த குடும்பத்தினர் கோரிக்கை

தேவரியா: உத்தரபிரதேச மாநிலம் தேவரியா மாவட்டம் லாங்ரா பஜார் டோலாவை சேர்ந்தவர் ராகேஷ் சவுகான்(33). இவர் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் வணிக கப்பலில் மாலுமியாக பணியாற்ற கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் வெனிசுலா சென்றுள்ளார். இந்த சூழலில் ராகேஷ் சவுகான் கப்பலில் இருந்து கீழே விழுந்து பலியானர். பெரும் போராட்டங்களுக்கு பிறகு ஒருமாதம் கழித்து ராகேஷ் சவுகானின் உடல் அவரது சொந்த ஊரான தேவரியாவுக்கு கொண்டு வரப்பட்டது.

அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த உறவினர்கள், மறு உடற்கூராய்வு செய்ய கோரினர். உத்தரபிரதேசத்தில் உள்ள தேவரியா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மறுஉடற் கூராய்வு செய்யப்பட்டது.  பின்னர் அக்கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எச்.கே.மிஸ்ரா கூறுகையில், “பிரேத பரிசோதனை அறிக்கையின்படி ராகேஷ் சவுகானின் உடலில் மூளை, இதயம், இரு நுரையீரல்கள், கல்லீரல், இரு சிறுநீரகங்கள், மண்ணீரல், கணையம், வயிறு, தைராய்டு சுரப்பி, ஹையாய்டு எலும்புகள், குரல்வளை மற்றும் மூச்சுக்குழாய் ஆகியவை காணவில்லை.

மேலும் கழுத்து முதல் அந்தரங்க பகுதி வரை சுமார் 60 செமீ நீளத்துக்கு தையலிடப்பட்ட ஒரு வெட்டுக்காயமும், தலையின் பின்புறம் குறுக்காக சுமார் 20 செமீ நீளத்துக்கு தையலிடப்பட்ட மற்றொரு வெட்டுக்காயமும் இருப்பதாக அறிக்கையில் உள்ளது. முக்கிய உறுப்புகள் இல்லாததால் அவரது இறப்புக்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை” என்றார். இதுகுறித்து ராகேஷ் சவுகானின் தந்தை ராம்தேவ் சவுகான் கூறுகையில், “ ராகேஷ் சவுகானின் மர்ம மரணம், உடல் உறுப்புகள் மாயமானது பற்றி ஒன்றிய, மாறில அரசு நடுநிலையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என வலியுறுத்தினார்.

Tags : Venezuela ,Devaria ,Rakesh Chauhan ,Langra Bazaar Dola, Devaria District, Uttar Pradesh State ,Rakesh ,
× RELATED டெல்லிக்கு மஞ்சள் மும்பைக்கு ஆரஞ்சு...