×

இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.74,781 கோடி இழப்பு பெட்ரோல், டீசல் விலை குறைய 2-3 மாதங்கள் கூட ஆகலாம்: கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் குறைக்க வாய்ப்பு இல்லை; ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிவிப்பால் பரபரப்பு

புதுடெல்லி: மேற்காசிய போர் நெருக்கடி காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.74,781 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைய 2 அல்லது 3 மாதங்கள் ஆகலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.  டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், மேற்காசிய போரின்போது வாங்கப்பட்ட எரிபொருளை இந்திய நிறுவனங்கள் அதிக விலை கொடுத்தே சுத்திகரித்து வருகின்றன.

எரிபொருள் உற்பத்திக்கான மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை எண்ணெய் நிறுவனங்கள் வழக்கமாக குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பே கொள்முதல் செய்கின்றன. எனவே, தற்போது சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் என்பது, சர்வதேச விலை மிக அதிகமாக இருந்த ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் வாங்கப்பட்டது. ஜூன் 30ம் தேதி வரை அடக்க விலையை விட குறைவான விலையில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவை விற்பனை செய்யப்பட்டதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.74,781 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு (அப்போதைய விலையில்) வாங்கிய கச்சா எண்ணெய் இருப்பையே நாங்கள் இன்று பயன்படுத்துகிறோம். இந்த விலை சரிவு 2-3 மாதங்களுக்குத் தொடர்ந்தால், அப்போது பார்க்கலாம். ஆனால் இது ஒரு அனுமான நிலை மட்டுமே. வளர்ச்சியடைந்த நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு சுமார் 20 சதவீதமாகவும், இந்தியாவின் அண்டை நாடுகளில் சுமார் 35 சதவீதமாகவும் இருந்த நிலையில், நெருக்கடியின் போது இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு வெறும் 5.58 சதவீதமாக மட்டுமே இருந்தது.

கடந்த நான்கு மாதங்களில் நெருக்கடியான காலகட்டத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தியிருந்ததால்தான், நயாரா நிறுவனம் இப்போது விலையைக் குறைத்துள்ளது. அவர்கள் அந்த விலை உயர்வைத்தான் இப்போது திரும்பப் பெற்றுள்ளனர்; அதாவது, அந்த விலையை மட்டுமே குறைத்துள்ளனர். அதேவேளையில், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அந்த நேரத்தில் விலையை உயர்த்தியிருக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Union Minister ,Hardeep Singh Puri ,New Delhi ,Union government ,West Asian war crisis ,Delhi ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...