×

2024 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நயினார் நாகேந்திரன் ஆஜர்: வரும் 16ம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்க மாஜிஸ்திரேட் உத்தரவு

சென்னை: கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் சுமார் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், அவரது தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜவின் முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், அந்த கட்சியை சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிசிஐடி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், சேகர் உள்பட 13 பேருக்கு எதிராக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, குற்ற பத்திரிகை நகல் பெறுவதற்காக நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 11 பேர் நேற்று ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுந்தர பாண்டியன் முன்பு ஆஜரானார்கள். குற்றஞ்சாட்டப்பட்ட கோவர்தன் விக்னேஷ் என்ற கணேஷ் இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி சுந்தர பாண்டியன், சம்பந்தப்பட்ட அனைவரும் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும். அப்போது அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்.

Tags : Nayinar Nagendran ,Georgetown ,2024 parliamentary elections ,Chennai ,Nellai Express ,Tirunelveli ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து