×

இன்று மகா சிவராத்திரி விழா குமரியில் சிவாலய ஓட்டம் தொடங்கியது கோபாலா,கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பங்கேற்பு

புதுக்கடை, மார்ச் 11: குமரியில் கோபாலா, கோவிந்தா கோஷத்துடன், சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் தேய்பிறை காலத்தில் வரும் சதுர் தசி மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கண் உறங்காமல் விடிய, விடிய சிவபெருமானை தரிசனம் செய்வது வாழ்வில் துன்பங்கள் விலகி இன்பத்தை பெருக செய்யும் என்பது நம்பிக்கை ஆகும். அதன்படி இன்று (11ம் தேதி) மகா சிவராத்திரி ஆகும். இந்த நாளில் சிவன் கோயில்களில்  விடிய, விடிய நான்குகால பூஜைகள் நடைபெறும். சிவராத்திரி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் நடக்கும் சிவாலய ஓட்டம் நிகழ்ச்சி  பிரசித்தி பெற்றதாகும்.புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து துவங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு ஆலயங்களில் தரிசனம் செய்து, திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆலயத்தில் நிறைவு செய்வதே சிவாலய ஓட்டம் ஆகும். இந்த 12 சிவாலயங்களையும் ஓடி சென்றே பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

குமரி மாவட்டத்தில் மட்டும் நடக்கும், வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம்,  நேற்று மாலை முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து தொடங்கியது. காவி வேஷ்டி, துண்டு மற்றும் கையில் விசிறி, திருநீறு பையுடன் கோபாலா, கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை தொடங்கினர். சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்பதை விளக்கும் வகையில் இந்த நிகழ்வு நடக்கிறது. வழிநெடுகிலும் பக்தர்களுக்கு இளநீர், வாழைப்பழம், குளிர்பானங்கள் போன்றவற்றை பக்தர்கள் வழங்கினர். இன்று திருநட்டாலம் சிவன் மற்றும் விஷ்ணு ஒன்றாக காட்சியளிக்கும் சங்கர நாராயணர் கோயிலில் ஓட்டத்தை நிறைவு செய்கிறார்கள். சுமார் 110 கி.மீ. ஓடி, ஆலயங்களில் தரிசனம் செய்வார்கள். இதே போல் இன்று (11ம் தேதி) சிவராத்திரியையொட்டி காலையில் இருந்து கார், பைக்குகளிலும் பக்தர்கள் 12 சிவாலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்வார்கள். இதையொட்டி சிவாலயங்களில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்துக்கு இன்று (11ம்தேதி) உள்ளூர் விடுமுறை ஆகும். இதே போல் சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் அனைத்து சிவன் கோயில்களிலும் இன்று நள்ளிரவு முதல் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.


Tags : Shivalaya ,Maha Shivaratri festival ,Kumari ,Gopala ,Govinda ,
× RELATED குமரி கடலில் குளிக்க 4-வது நாளாக தடை நீடிப்பு..!!