×

தவெகவுக்கு செல்லும் அதிமுக எம்எல்ஏக்கள்; வழக்குகளில் இருந்து எஸ்கேப்பாகவே டான்ஸ் ஆடிக்கொண்டு ஓடுகிறார்கள்: பொள்ளாச்சி ஜெயராமன் பளார்

கோவை: கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அதிமுகவை விட்டு செல்கிறவர்கள், தங்களது சுயநலத்திற்காக செல்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, விரலில் வைத்த மை காய்வதற்கு முன்னால் கட்சி மாறி ஓடுபவர்களை பற்றி நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படி செல்பவர்கள், வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்தவர்கள், மோசடி செய்தவர்கள், மக்களிடத்தில் நற்பெயரை இழந்தவர்கள், வழக்குகள் நிலுவையில் இருப்பவர்கள், எடப்பாடி பழனிசாமி கொடுத்த இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்று விட்டு, ஒரு அமாவாசை முடிவதற்குள் கட்சிமாறி ஓடுகின்றனர். இப்படிப்பட்டவர்களை பற்றி யாரும் கவலைப்படாதீர்கள். இவர்கள் எல்லாம் வந்தேரிகள், வேடந்தாங்கல் பறவைகள் போன்ற புனைப்பெயர் கொண்டவர்கள். இவர்களால், மக்களுக்கு எந்த பயனும் இருக்காது.

அதிமுக ஆட்சி அமையவில்லை என தெரிந்து, இங்கிருந்து 25 பேர், மைனாரிட்டியாக உள்ள தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த ஆதரவில்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது. இப்போது ஒவ்வொருவராக டான்ஸ் ஆடிக்கொண்டு தவெகவுக்கு போகின்றனர். அவர்கள் நோக்கம் எல்லாம், அவர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, நில அபகரிப்பு வழக்கு, லஞ்ச ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதில் இருந்து தப்புவதற்காக கட்சி மாறுகின்றனர்.

இப்படி கட்சி மாறுகிறவர்கள், பிற்காலத்தில் நாசமாகி போய்விடுவார்கள், காணாமல் போய்விடுவார்கள். தற்போது ஆள்பிடிப்பில் ஈடுபடும் தூய்மை சக்தி எனக்கூறும் துர்ஷ்டசக்தி, மைனாரிட்டியாயாக இருக்கும் தவெகவை மெஜாரிட்டியாக்க வேண்டும் என்ற முயற்சியில், முதல்வர் நடிகர் விஜய் ஈடுபடுகிறார். இந்திய வரலாற்றில் தேர்தல் முடிந்த ஒரு மாத காலத்திற்குள் விலைபேசி வாங்கும் இந்த வியாபார அரசியல் விரைவில் மக்கள் மன்றத்தில் எடுபடாமல் போகும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் வழிவந்தவர்கள் அப்படியே அதிமுகவில் தொடர்ந்து பயணிக்கிறார்கள். அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. தமிழகத்தில் தற்போது இருள் சூழ்ந்துள்ளது. அது மறைந்து, விரைவில் வெளிச்சம் வரும். அதிமுக மீண்டும் வெற்றிபெறும். இவ்வாறு வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : AIADMK MLAs ,Thaveka ,Pollachi Jayaraman Palar ,Coimbatore ,Suburban South District ,AIADMK ,Pollachi Jayaraman ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து