பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் நேற்று பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், காரை துரத்தி சென்றனர். அல்லாளபுரம் சாலையில் பாரியூர் அம்மன் நகர் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
டிரைவர் தப்பிக்க முயன்றபோது, போலீசார் அவரை துரத்தி பிடித்தனர். காரை சோதனை செய்த போது அதில் மூட்டை, மூட்டையாக குட்கா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் காரை ஓட்டி வந்தது திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியை சேர்ந்த தினேஷ் செபாஸ்டியன் (40) என்பதும், அவர் திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த பெரியசாமியிடம் (30) கொடுக்க குட்கா கொண்டு சென்றதும் தெரியவந்தது.
அவரது தகவலின் பேரில் பாரியூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்த மளிகை வியாபாரி பெரியசாமி வீட்டில் போலீசார் சோதனை செய்த போது அங்கு பாத்திரத்தில் பதுக்கி வைத்திருந்த 40 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த 100 கிலோ குட்காவும் கைப்பற்றப்பட்டது. தினேஷ் செபாஸ்டியன் மற்றும் பெரியசாமியை போலீசார் கைது செய்தனர். பெரியசாமி, பல்லடம் சட்டமன்ற தொகுதியில் தவெக உறுப்பினர் என்றும், தினேஷ் செபாஸ்டியன் ஏற்கனவே குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெறுவதும் தெரியவந்தது.
