×

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி; பக்ரைன், குவைத் மீது ஈரான் ஏவுகணை வீச்சு: பேச்சுவார்த்தை முழுமையாக நிறுத்தப்படும் எனவும் எச்சரிக்கை

துபாய்: அமெரிக்கா-ஈரான் இடையே நீண்ட இழுபறிக்குப் பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டு கடந்த 18ம் தேதி இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான், கத்தாருடன் இணைந்து அமெரிக்கா-ஈரான் இடையே சுவிட்சர்லாந்தில் நடந்த பேச்சவார்த்தையில், அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்ட இருதரப்புக்கும் இடையே உடன்பாடும் எட்டப்பட்டது. இதன் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியதால் உலக நாடுகள் நிம்மதி அடைந்தன.

இந்த சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நேற்று முன்தினம் கத்தார் அரசின் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதையடுத்து, ஈரானின் ஏவுகணை சேமிப்பிடங்கள், டிரோன் தளங்கள், ரேடார் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான்நேற்று பக்ரைன், குவைத் நாடுகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

பக்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5வது படைத்தளம், சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கட்டிடத்தின் மேல் தளம் முழுமையாக சேதமடைந்தாலும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என பக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் ஈரானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், ‘‘ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதால் மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் நீடித்தால், ஈரானுக்கு கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்துள்ளார். மறுபுறம், ஈரான் புரட்சிகரக் காவல் படை வெளியிட்ட அறிக்கையில், ‘ அமெரிக்காவின் அத்துமீறும் செயல்களுக்கு தக்க பதிலடி தொடரும்.

அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டால் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகள் முழுமையாக நிறுத்தப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரானின் பதில் தாக்குதலைத் தொடர்ந்து, கெஷ்ம் தீவு மற்றும் சிரிக், பந்தர்-இ-லெங்கே ஆகிய நகரங்களை குறிவைத்து அமெரிக்கா 2வது நாளாக நேற்றும் குண்டுவீசியது குறிப்பிடத்தக்கது.

* முழு கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஈரானின் நேரடி கட்டுப்பாடு இன்றி, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அமெரிக்க கடற்படை தலைமையிலான பன்னாட்டு அமைப்பு நடவடிக்கை எடுத்தது. இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று அளித்த பேட்டியில், ‘‘அடுத்த 30 நாட்கள் ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலும் ஏற்கனவே பதற்றமாக உள்ள சூழலை மேலும் மோசமாக்கும்’’ என கூறி உள்ளார்.

Tags : US ,Iran ,Bahrain, Kuwait ,DUBAI ,UNITED STATES ,Switzerland ,United ,States ,Pakistan ,Qatar ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...