சென்னை: சென்னை வானகரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் 5000 பேர் திமுகவில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 5000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் பேசியதாவது:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பொருளாளராக இருந்த கழகத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். எம்.எல்.ஏ. ஆனார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், கொள்கைதான் முக்கிய என நீங்கள் திமுகவில் இணைந்துள்ளீர்கள். திமுக வலிமையாக இருந்தால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என திமுகவில் சேர்ந்துள்ளீர்கள். கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு இதுவரை இல்லாத வளர்ச்சியை எட்டியுள்ளது. திமுக ஆட்சியின் மேல் இருந்த நம்பிக்கையில்தான் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்தன.
ஆட்சி மாற்றம் நடந்து ஒரு மாதத்திலேயே தமிழ்நாடு அதலபாதாளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் டேக் டைவர்ஷன் என திசை திருப்பும் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது நடக்கும் அதிக குற்றங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகளே சம்பந்தப்பட்டுள்ளனர். திமுகவை போல வெற்றிபெற்ற கட்சியும் இல்லை, தோல்வி அடைந்த கட்சியும் இல்லை. தவெக ஆட்சியில் ஓட்டுப்போட்டவர்களும் கவலைப்படுகிறார்கள், ஓட்டுப்போடாதவர்களும் கவலைப்படுகிறார்கள்.
அமைச்சர்களை நோக்கி மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள். பார்த்து பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை நாம் சீரழிய விடக்கூடாது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு போன்றவற்றால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின் பெயர் நிலைத்து நிற்கும். எப்பொழுது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம், நாம் அதற்கு 100% தயாராக இருக்க வேண்டும். மக்களை காக்கவேண்டிய பொறுப்பு திமுகவுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. என கூறியுள்ளார்.
