×

நன்கொடை நிதியில் முறைகேடு செய்த விவகாரம் அயோத்தி ராமர்கோயில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் ராஜினாமா: உறுப்பினரும் பதவி விலகியதால் பரபரப்பு

லக்னோ: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டை தொடர்ந்து, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர். அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் நன்கொடை, காணிக்கை பணம், நகைகளில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்கின்றனர்.

அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய், நிர்வாகி அனில் மிஸ்ரா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இது குறித்து அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரண்டு ராஜினாமா கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். கடந்த சில நாட்களாக ராமர் கோயிலில் நடந்ததாக கேள்விப்பட்ட நிகழ்வுகள் எங்களை அதிர்ச்சியிலும், மனவேதனையிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளன.

அனைத்து ராம பக்தர்கள் மற்றும் ராம சேவகர்களின் பிரதிநிதிகளாக இங்கு பணியாற்றும் நாங்கள் நியாயமான விசாரணைக்கு உறுதிபூண்டுள்ளோம் என்பதை பக்தர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். பக்தர்களால் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட வெள்ளி செங்கற்கள், ஆபரணங்கள் போன்றவை முறையான கணக்குடன் அறக்கட்டளையிடம் பாதுகாப்பாக உள்ளன.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். சனாதன தர்மத்தின் பிம்பத்தை களங்கப்படுத்த முற்படும் சமூக விரோத, மத விரோத, சுயநல சக்திகளின் முயற்சிகள் வெற்றி பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

* பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அகிலேஷ் பிரசாத் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இவ்வளவு பெரிய விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மௌனம் காக்கிறார் என்பதை நாடு அறிய விரும்புகிறது. மக்களின் நம்பிக்கை சிதையாமல் இருக்க, இந்த வழக்கின் நியாயமான விசாரணையை உறுதி செய்ய பிரதமர் மோடி முன்வர வேண்டும். இவை அனைத்தும் அவர்கள் ராம பக்தர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளன.

அவர்கள் ராம பக்தர்களாக இருந்திருந்தால், பகவான் ராமரின் கண்ணியத்தைக் காத்திருப்பார்கள். உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பார்கள்’’ என்றார். ‘‘பாஜகவை பொறுத்தவரை பணம் மட்டுமே மதம். மக்களின் நம்பிக்கையுடன் விளையாடப்பட்டுள்ளது’’ என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

வயநாட்டில் நேற்று பேட்டி அளித்த காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, ‘‘நாடு முழுவதிலும் உள்ள நம்பிக்கையும் பற்றும் கொண்ட மக்கள் நன்கொடைகளை வழங்கினர். இப்போது அந்த நன்கொடைகள் திருடப்பட்டதாக தெரிகிறது. இது துரதிர்ஷ்டவசமானதும் அவமானகரமானது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

Tags : Ayodhya Ram Temple Trust ,General Secretary ,Lucknow ,Ayodhya Ram Temple ,Sampath Rai ,Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust ,Anil Mishra ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...