இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரின் சகோதரர் ஷாஹித் அக்தரின் இறுதிச் சடங்கில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர். வேகப்பந்து வீச்சால் கிரிக்கெட் உலகில் பெயர் பெற்றவர். இவரது சகோதரர் ஷாஹித் அக்தர். இதய செயலிழப்பு காரணமாக ஷாஹித் அக்தர் மூன்று நாட்களுக்கு முன்பு காலமானார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாஹித் அக்தரின் இறுதிச் சடங்கில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர்கள் பங்கேற்றனர். இதுதொடர்பாக லஷ்கர்-இ-தொய்பாவின் அரசியல் அமைப்பான ‘பாகிஸ்தான் மார்கசி முஸ்லிம் லீக்’ வெளியிட்ட வீடியோவில், 26/11 மும்பை தாக்குதலின் சூத்திரதாரியான ஹபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளிகள் இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது. ஹபீஸ் சயீத், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை தொடங்கியவர் ஆவார்.
இறுதிச் சடங்கின்போது வெளியான படங்களில் பாகிஸ்தான் மார்கசி முஸ்லிம் லீக் அமைப்பின் இஸ்லாமாபாத் பிரிவுத் தலைவர் இனாம்-உர்-ரஹ்மான் கம்போ காணப்பட்டார். மேலும், அந்த அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் அப்துல்லா டூர், மண்டலப் பொதுச் செயலாளர் ஹபீஸ் உமர், கித்மத் கமிட்டியின் தலைவர் அம்ஜத் பட்டி மற்றும் பலர் அங்கு வந்திருந்தனா்.
அவர்கள் வரிசையில் நின்று பிரார்த்தனை செய்வதை அந்த வீடியோ காட்டியது. லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் பிரதிநிதிகள் தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றது குறித்த விமர்சனங்கள் குறித்து அக்தா் இதுவரை எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
