×

சூரிய சக்தி திட்டத்தைப் பெற அதிகாரிகளுக்கு லஞ்சம்; அதானி மீதான குற்றச்சாட்டுகளை தற்போது கைவிடுவது ஏன்?.. அமெரிக்க நீதிபதி சரமாரி கேள்வி

 

வாஷிங்டன்: அதானி மீதான கிரிமினல் வழக்கை ரத்து செய்ய மறுத்த அமெரிக்க நீதிபதி, அதற்கான காரணத்தை விளக்குமாறு அந்நாட்டு நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தியத் தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது, இந்தியாவில் சூரிய சக்தி திட்டத்தைப் பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காவில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை, தற்போதைய டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உள்ள நீதித்துறை திடீரென கைவிட முடிவு செய்தது.

இதற்கான மனுவை ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதித்துறை அதிகாரிகள், அதானி மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர விரும்பவில்லை எனத் தெரிவித்தனர். அதானியின் வழக்கறிஞர்களும் இந்த வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதிட்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராபிஸ், வழக்கை உடனடியாகத் தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார். நீதித்துறையின் கோரிக்கை குறித்து அவர் கூறுகையில், ‘அரசாங்கம் தாக்கல் செய்துள்ள சுருக்கமான மற்றும் தெளிவற்ற விளக்கம் இந்த வழக்கை முடித்து வைக்கப் போதுமானதாக இல்லை.

எதன் அடிப்படையில் இந்த கிரிமினல் குற்றச்சாட்டுகளைக் கைவிட நீதித்துறை முடிவு செய்தது என்பதை விரிவாக விளக்க வேண்டும்’ என்று காட்டமாகத் தெரிவித்தார். மேலும், வரும் 13ம் தேதிக்குள் இது குறித்து முழுமையான விளக்கத்தை அளிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். லஞ்சப் புகார் ஒருபுறம் இருக்க, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளை மீறிய விவகாரத்தில் 275 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிபதியின் இந்த உத்தரவு அதானி குழுமத்திற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Tags : Bribe ,Adani ,U.S. ,Judge ,Saramari ,WASHINGTON ,US ,DEPARTMENT OF JUSTICE ,Gautam Adani ,Sagar Adani ,
× RELATED பெண்களின் பாதுகாப்பில் NO CHANGE AND NO COMPROMISE:...