சிலச்சர்: அசாம் மாநிலம் சிலச்சரில் உள்ள மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடத்தியதாக 28 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்திற்குட்பட்ட சிலச்சர் பகுதியில் உள்ள இரண்டு ஸ்பா (மசாஜ் சென்டர்) மையங்களில் சட்டவிரோத விபசார தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கச்சார் மாவட்ட கூடுதல் எஸ்.பி. (குற்றம்) ரஜத் பால் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த மையங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 28 அழகிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஏமாற்றுதல், பொது இடத்தில் ஆபாசமாக செயல்படுதல் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், சட்டவிரோத கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழும் சிலச்சர் சதர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் சிலச்சர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதும், ஜோர்கட், சோனித்பூர், காம்ரூப் மற்றும் நாகாலாந்து மாநிலம் திமாப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து கூடுதல் எஸ்.பி. ரஜத் பால் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சட்டவிரோத செயல்களுக்குப் பின்னால் மாநிலங்களுக்கு இடையேயான ஆள்கடத்தல் கும்பல் இருக்கலாம் என பலமாக சந்தேகிக்கிறோம். ஸ்பா மையங்களின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.
