×

மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம்; விபி ஜிராம் ஜி திட்டமாக மாற்றப்பட்டு ஜூலை 2ம் தேதி துவக்கம்: அரசு உத்தரவு

 

நெல்லை: ஒரு ஆண்டுக்கு 100 நாட்கள் கிராமப்புற பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மகாத்மா காந்தி வேலைஉறுதி திட்டம் விபி ஜிராம் ஜி திட்டமாக மாற்றப்பட்டு ஜூலை 2ம் தேதி துவக்கப்படுகிறது. புதிய திட்டத்தின் மூலம் 100 நாட்கள் வேலை என்பது 125 நாட்களாக அதிகரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த திட்டம் மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கிராமப்புற பகுதி மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் ஒன்றிய பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது அறிமுகப்படுத்தப்பட்டது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை ஒன்றிய அரசு விக்சித் பாரத் வேலை உறுதி திட்டம் (விபி ஜிராம் ஜி) என பெயரை மாற்றியது. மேலும் 100 நாட்கள் வேலை என்பதை 125 நாட்கள் வேலை என மாற்றம் செய்தது. அதுமட்டுமல்லாது ஒன்றிய அரசின் நிதி பங்கீட்டை குறைத்து 60 சதவீதம் ஒன்றிய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் நிதி பகிர்வு என அறிவித்தது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் எதிர்ப்புகளையும் மீறி ஒன்றிய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், திட்டத்தின் துவக்க விழா காணொலி மூலம் ஜூலை 2ம் தேதி நடக்கிறது.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் நடக்கும் அன்று காலை 11 மணிக்கு நடக்கும் விழாவில் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார். இதை முன்னிட்டு தமிழக ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அமுதவல்லி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: விபி ஜிராம் ஜி திட்டத்தை ஒன்றிய அமைச்சர் துவக்கி வைப்பதை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் திட்டத்தை செயல்படுத்த அதற்கான களத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும். துவக்க விழாவில் திட்டத்தின் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க செய்ய வேண்டும்.

ஒன்றிய அமைச்சருடன் திட்டத்தின் பயனாளிகள் கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளில் இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து கண்காட்சியாக அமைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தின் பயன்பாடுகள் குறித்த சுவரொட்டிகள், பேனர்கள் துவக்க விழாவில் வைக்கலாம். இந்த திட்டத்தின் சாதனைகள் அடங்கிய குறிப்புகளை வைக்க வேண்டும். 125 நாட்கள் உயர்த்தப்பட்ட வேலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், டிஜிட்டல் சேவைகள் மூலம் விளக்கமும் பரப்புரை செய்ய வேண்டும். இந்த விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள், இளைஞர்கள் பங்கேற்க செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதிச்சுமை
இந்த திட்டத்திற்கான மாநில அரசின் நிதி பங்களிப்பு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஜிஎஸ்டி பங்கீட்டு நிதியை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பிரித்தளிப்பதில் பாரபட்சம் காட்டி வரும் நிலையில், இந்த திட்டத்தை மாற்றுவதாகவும், வேலை நாட்களை அதிகரிப்பதாகவும் கூறும் ஒன்றிய அரசு திட்டத்தின் 40 சதவீதம் நிதியை மாநிலங்கள் தலையில் சுமத்தியுள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இந்த நிதி பங்கீடு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.

Tags :
× RELATED சூரிய சக்தி திட்டத்தைப் பெற...